ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சிறுமி பலி


ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சிறுமி பலி
x
தினத்தந்தி 26 Sept 2021 12:55 AM IST (Updated: 26 Sept 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

ஒடுகத்தூர் அருகே உத்திரகாவிரி ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

அணைக்கட்டு

ஒடுகத்தூர் அருகே உத்திரகாவிரி ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

திடீர் வெள்ளப்பெருக்கு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த குருவராஜபாளையம் அருந்ததி காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 45). இவரின் மனைவி வேண்டா. இவர்களுக்கு தட்சன் (12) என்ற மகனும், துளசி (10), பூஜா (7) என்ற மகள்களும் உண்டு. பூஜா அங்குள்ள ஒரு பள்ளியில் 3&ம் வகுப்பு படித்து வந்தாள். 

நேற்று முன்தினம் காலை பூஜா தனது தாத்தாவுடன் வேர்க்கடலை அறுவடை செய்வதற்காக உத்திரகாவிரி ஆற்றைக் கடந்து சென்றுள்ளார். மாலை பூஜா மற்றும் தோழிகள் சிலரும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் உத்திரகாவிரி ஆற்றைக் கடந்து வர முயன்றனர். அப்போது பூஜா, நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள், நான் ஆற்றில் குளித்து விட்டு வருகிறேன், எனத் தெரிவித்தாள்.
அந்த நேரத்தில் உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம் அதிகமாக ஓடியது தெரியாமல் பூஜா ஆற்றில் இறங்கி குளிக்க முயன்றாள். அப்போது தண்ணீர் ஓட்டம் வேகமாக இருந்ததால் ஆற்று வெள்ளத்தில் பூஜா அடித்துச் செல்லப்பட்டாள். வெகு நேரம் ஆகியும் அவள் வீட்டுக்கு வராததால், அவரின் தாத்தா மற்றும் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

பூஜா குளித்து விட்டு வருவதாக கூறியதால், மகளை தேடி பெற்றோர் ஆற்றுக்குச் சென்றனர். உத்திரகாவிரி ஆற்றின் கரையில் பூஜாவின் உடைகள் இருந்தன. ஆனால் அவளை காணவில்லை. பூஜா குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியபோது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம், எனக் கருதி பெற்றோர் ஒடுகத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் நள்ளிரவு 2 மணிவரை பூஜாவை தேடினர். அவளை காணாததால் நேற்று அதிகாலை காலை 5 மணிக்கு மீண்டும் தேடும் பணியை தொடங்கினர். அப்போது, குருவராஜபாளையம் சுடுகாடு அருகே பிணமாக கிடந்த பூஜாவின் உடலை தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர்.

பிரேதப் பரிசோதனை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூஜாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்க முயன்ற சிறுமி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story