தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்- கனிமொழி எம்.பி. பேச்சு


தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்- கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 26 Sept 2021 1:06 AM IST (Updated: 26 Sept 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் என கனிமொழி எம்.பி. பேசினார்.

இட்டமொழி:
மத்திய, மாநில அரசின் திட்டங்கள் மக்களை எளிதில் சென்றடைய தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் நாங்குநேரி யூனியன் பகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், பரப்பாடி தனியார் மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முழு முனைப்புடனும், ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த 4 மாதங்களுக்குள் எண்ணற்ற சாதனைகளை புரிந்துள்ளது. முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார். தேர்தலில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் செயல்படுத்தி வருகிறார். அரசு டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. ஆவின் பால், பெட்ரோல் விலை குறைக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பரவல் அதிகமாக இருந்த காலத்தில் பதவி ஏற்று கொண்டோம். எனினும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு தொற்று பரவலை கட்டுப்படுத்தி உள்ளோம். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.4 ஆயிரம் வழங்கி உள்ளோம். மேலும் பல்வேறு வகையான மளிகை பொருட்களும் ரேஷன் கடையில் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது. மக்களின் தேவைகளை அறிந்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளோம்.

வெற்றி பெற செய்யுங்கள்

மற்ற மாநிலங்களில் இருக்கின்றவர்களும் பாராட்டக்கூடிய வகையில் முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். தமிழகத்தில் பத்திரிகைகள், ஊடகங்கள் அனைத்தும் பாராட்டும் வகையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட்டு கொண்டே செல்லலாம்.
நாம் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை நிறைவேற்றிய பின்னரே வாக்கு கேட்க செல்கிறோம். மத்திய, மாநில அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதில் சென்றடைய ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பச்சையாறு அணை திட்டத்தின் மூலம் விடுபட்ட 46 குளங்களுக்கு தனி கால்வாய் அமைத்து தரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பரப்பாடியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின், மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் கிரகாம்பெல், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் என்.ஞானராஜ், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் சேகர், மூலைக்கரைப்பட்டி நகர செயலாளர் முருகையா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் அருள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story