கூலி்ப்படை ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்- போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு பேட்டி


கூலி்ப்படை ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்- போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு பேட்டி
x
தினத்தந்தி 26 Sept 2021 1:20 AM IST (Updated: 26 Sept 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கூலி்ப்படை ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்தார்.

நெல்லை:
தமிழகத்தில் கூலிப்படை ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நெல்லையில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்தார். 

டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆலோசனை 

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர்ந்து சாதிய கொலைகள், கொள்ளைகள் சம்பவங்கள் அரங்கேறின. இதைத்தொடர்ந்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று நெல்லைக்கு வந்தார். மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன், அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து அங்குள்ள கூட்டரங்கில் நெல்லை கலெக்டர் விஷ்ணு, தென்மண்டல ஐ.ஜி. அன்பு, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன், டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, மாநகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார், குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன் (நெல்லை), பத்ரி நாராயணன் (கன்னியாகுமரி), ஜெயக்குமார் (தூத்துக்குடி) ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தென் மாவட்டங்களில் சாதி மற்றும் முன்விரோத கொலைகள் அதிகரித்து வருவது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

கூலிப்படைக்கு முற்றுப்புள்ளி

பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
தென் மாவட்டங்களில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை நடைபெற்ற கொலைகளுக்கு பழிக்குப்பழியாக கொலைகள் நடந்து வருகிறது. குறிப்பாக நெல்லை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இந்த கொலைகள் அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் கோர்ட்டுகளில் சரண் அடைந்துள்ளனர். இதுபோன்ற கொலைகளை தடுக்கும் வகையில் அதிகமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 48 மணி நேரத்தில் ரவுடிகளை ஒழிப்பதற்காக ஆபரேஷன் டிஸ் ஆர்ம் சோதனையின்போது 16 ஆயிரத்து 370 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இதில் 2 ஆயிரத்து 512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். 734 ரவுடிகளிடம் இருந்து 8 துப்பாக்கிகள், 934 கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் கூலிப்படைகளை கண்காணிப்பதற்காக தமிழகம் முழுவதும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கூலிப்படையினரின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

துப்பாக்கி கலாசாரம் இல்லை

பழிக்குப்பழியாக நடைபெறும் கொலைகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழக காவல்துறை செயலாற்றி வருகிறது. பழிக்குப்பழியாக நடைபெறும் கொலை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து கூலிப்படையினர் தமிழகத்தில் கண்காணிக்கப்படுவார்கள். தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அங்கிருந்த போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Next Story