ஊராட்சி மன்ற தலைவர் - வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 44 பேர் போட்டி


ஊராட்சி மன்ற தலைவர் - வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 44 பேர் போட்டி
x
தினத்தந்தி 26 Sept 2021 1:52 AM IST (Updated: 26 Sept 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி மன்ற தலைவர் - வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 44 பேர் போட்டியிடுகின்றனர்.

அரியலூர்:

தற்செயல் தேர்தல்
பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 6 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும், இதே போல் அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 3 ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிகளுக்கும், 13 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் தற்செயல் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கி, கடந்த 22-ந்தேதி வரை நடைபெற்றது.
இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஒருவரும், 6 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 15 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அரியலூர் மாவட்டத்தில் 3 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 16 பேரும் மற்றும் 13 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 40 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை கடந்த 23-ந்தேதி நடைபெற்ற போது மாவட்டங்களில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்று கொள்ளப்பட்டது. வேட்பு மனு வாபஸ் பெற விரும்புவர்கள் நேற்று திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இறுதி வேட்பாளர் பட்டியல்
அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடலூர் ஊராட்சி 5&வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 2 பேரில் ஒருவரும், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆடுதுறை ஊராட்சி 4&வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 3 பேரில் ஒருவரும் என 2 பேர் நேற்று தங்களது வேட்பு மனுவை திரும்ப (வாபஸ்) பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பிரம்மதேசம் ஊராட்சியில் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், வாலிகண்டபுரம் ஊராட்சியில் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேரும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆடுதுறை ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும் போட்டியிடுகின்றனர். இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 3 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 10 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் அந்தப்பகுதிகளில் தேர்தல் பிரசாரம் களை கட்ட தொடங்கியது.
வேட்பு மனு வாபஸ்
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓலையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 7 பேரில் ஒருவரும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயகனைப்பிரியாள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 5 பேரில் 2 பேரும், மணகெதி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 4 பேரில் 2 பேரும் என 5 பேர் நேற்று தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். இதேபோல் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒட்டக்கோவில் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிலூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த தலா 4 பேரில் தலா 2 பேரும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட தளவாய் ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 3 பேரில் ஒருவரும், சிறுகடம்பூர் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 5 பேரில் 3 பேரும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகாபுரம் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 3 பேரில் 2 பேரும், இடையக்குறிச்சி ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 4 பேரில் 2 பேரும், இலையூர் ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 4 பேரில் ஒருவரும் என 13 பேர் நேற்று தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து இறுதி வேட்பாளர் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில்...
இதில் அரியலூர் மாவட்டத்தில் ஓலையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 6 பேரும், நாயகனைப்பிரியாள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 3 பேரும், மணகெதி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 2 பேரும் என 3 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர்.
ஒட்டக்கோவில் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், வெற்றியூர் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் 4 பேரும், கோவிலூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், தளவாய் ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், சிறுகடம்பூர் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஜெ.தத்தனூர் ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், இடையக்குறிச்சி ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், இலையூர் ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், அம்பாபூர் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேரும் என 9 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 23 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வாக்குப்பதிவு
இதனால் அந்தப்பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. வாக்குப்பதிவு அடுத்த மாதம் 9-ந்தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 12-ந் தேதி நடக்கிறது. தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த மாதம் 20-ந்தேதி பதவி ஏற்க உள்ளனர்.
போட்டியின்றி தேர்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், நாரணமங்கலம் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓலைப்பாடி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உட்கோட்டை ஊராட்சி 10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், கீழமாளிகை ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், நாகம்பந்தல் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களை எதிர்த்து போட்டியிட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர். இதனால் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த கவுரி அன்பழகன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்தப்பகுதிகளில் வருகிற 9-ந்தேதி தற்செயல் தேர்தல் நடைபெறாது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கூடலூர் ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 2 பேரில் ஒருவரும், அரியலூர் மாவட்டத்தில் அழகாபுரம் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த 3 பேரில் 2 பேரும் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்று விட்டதால், அந்தப்பகுதிகளிலும் இருந்து தலா ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர். இதனால் அந்தப்பகுதிகளிலும் தற்செயல் தேர்தல் நடைபெறாது.

Next Story