கோவில்பட்டி வீரவாஞ்சிநகரில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம்


கோவில்பட்டி வீரவாஞ்சிநகரில்  வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 26 Sept 2021 5:33 PM IST (Updated: 26 Sept 2021 5:33 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி வீரவாஞ்சிநகரில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்

கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி சினிமா டைரக்டர் கவுதமன் தலைமையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போராட்டம்
கோவில்பட்டி வீரபாண்டி நகரில் கடந்த 50 ஆண்டுகளாக 1300 க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்களிடம் நகரசபை நிர்வாகம் வீட்டு தீர்வை வசூலிப்பதுடன், வாறுகால் வசதியுடன் ரோடு போட்டு, தெரு விளக்குகள் அமைத்து, குடிநீர் வசதியும் செய்து கொடுத்துள்ளது. இந்த நிலையில் வீடுகள் அமைந்துள்ள இடம் கோவில் நிலம் என்று கூறி குடியிருப்பவர்களுக்கு பட்டா மட்டும் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று வீரவாஞ்சி நகர் தனியார் பள்ளி முன்பு இப்பகுதி மக்கள் தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளரும், சினிமா டைரக்டருமான கவுதமன் தலைமையில், வீரவாஞ்சி நகர் பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அதிகாரிகள் பேச்சுவார்த்தை 
போராட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் வேல் முருகன், மாவட்ட செயலாளர்கள் கணேசன், சரவணன், வழக்கறிஞர் அணி இசக்கிமுத்து, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரகு, மாணவர் அணி செயலாளர் பூலோக பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் காலையில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், தாசில்தார் அமுதா ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சமூக தீர்வு ஏற்படவில்லை. மாலையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கர நாராயணன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு, தாசில்தார், வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரி சேகர், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
கலெக்டரை சந்திக்க முடிவு
இதில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜை இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு கோரிக்கை குறித்து தமிழ் பேரரசு கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.


Next Story