குமரியில் 2-வது நாளாக 122 ரவுடிகள் சிக்கினர் - போலீசார் அதிரடி நடவடிக்கை


குமரியில் 2-வது நாளாக 122 ரவுடிகள் சிக்கினர் - போலீசார் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Sept 2021 5:40 PM IST (Updated: 26 Sept 2021 5:40 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் 2-வது நாளாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 122 ரவுடிகள் போலீசாரிடம் சிக்கினர்.

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் குற்றச்செயல்களை அடியோடு ஒழிக்கவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் ஸ்டாம்பிங் ஆபரேஷன் என்ற பெயரில் ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தினர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் 450-க்கும் அதிகமான ரவுடிகளை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

குமரி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக போலீசார் ரவுடிகள் வேட்டையில் இறங்கியுள்ளனர். இதில் முதல் நாளில் 67 ரவுடிகள் போலீசாரிடம் சிக்கினர். இதைத் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று முன்தினம் இரவும் ஸ்டாம்பிங் ஆபரேஷன் நடந்தது. அப்போது போலீசார் நடத்திய ஆய்வில் ஒரே நாளில் 122 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

இதில் 5 பேர் வாரண்டு குற்றவாளிகள் ஆவர். இவர்கள் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டு கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவர்கள் ஆகும். எனவே 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மீதமுள்ளவர்கள் மீது 109, 110 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நன்னடத்தை சான்றிதழ் எழுதி வாங்கப்பட்டது. அவர்கள், எந்த குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டோம் என உறுதி அளித்துள்ளனர்.

அதையும் மீறி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு 1 ஆண்டு வரை ஜாமீனில் வர முடியாத பிரிவின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள். குமரி மாவட்டத்தை பொறுத்த வரை தற்போது பெரிய ரவுடிகள் என்ற நிலையில் ஆக்டிவ் ரவுடிகள் எவரும் இல்லை. எனவே பழைய ரவுடிகளின் தற்போதைய நிலை என்ன? என்பதை தனிப்பிரிவு போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இவர்களில் உள்ளூரில் இருப்பவர்கள் எத்தனை பேர்? வெளியூர்களில் இருப்பவர்கள் யார்? அவர்களின் தொழில் என்ன? என்பது தொடர்பாகவும் விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே சென்னையில் கொலை வழக்கு ஒன்றில் நாகர்கோவிலை சேர்ந்த பிரபல ரவுடி முண்டக்கன் மோகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. குறிப்பாக தேரூர் இரட்டை கொலை வழக்கு அவர் மீது உள்ளது. எனவே அவரை குமரி மாவட்டத்துக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story