நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் வேகமாக குறைந்து வரும் வைகை அணை நீர்மட்டம்
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக 71 அடி உயரமுள்ள வைகை அணை நீர்மட்டம் கடந்த ஜூன் மாதம் 68 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆனால் பெரிதும் எதிர்பார்த்த தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு போதுமான அளவு பெய்யவில்லை. இதன்காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து அடியோடு சரிந்தது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே வைகை அணைக்கு நீர்வரத்தாக உள்ளது.
குறையும் நீர்மட்டம்
இதனிடையே பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து குறைவாக இருப்பதால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அதன்படி கடந்த மாதம் 65 அடியாக இருந்த வைகை அணை நீர்மட்டம் தற்போது 54.45 அடியாக உள்ளது. இதனிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்யவில்லை. இதனால் வைகை அணை நீர்மட்டம் மேலும் குறையும் வாய்ப்பு உள்ளது.
நேற்றுக்காலை 6 மணி நிலவரப்படி வைகை அணைக்கு வினாடிக்கு 982 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கும், மதுரை மாநகர குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 1,219 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 2 ஆயிரத்து 630 மில்லியன் கனஅடியாக இருந்தது.
வைகை அணை நீர்மட்டம் குறைய தொடங்கியுள்ளதால், அணையை நம்பியுள்ள மக்களும், விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story