ஆண்டிப்பட்டியில் கொரோனா தடுப்பூசி செலுத்த குவிந்த பொதுமக்கள் தட்டுப்பாட்டால் தாமதம்
ஆண்டிப்பட்டியில் கொரோனா தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் குவிந்தனர். இதனிடையே தட்டுப்பாட்டால் தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி:
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு செலுத்த 500 டோஸ் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களிடையே ஏற்பட்ட ஆர்வம் காரணமாக ஏராளமான மக்கள் வரிசையில் நின்றிருந்தனர். இதையடுத்து முதலில் நின்ற 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால் அதன்பின்னரும் வரிசையில் நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்தனர். இதனையடுத்து அருகே உள்ள இடங்களில் இருந்து 250 டோஸ் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. ஆனாலும் மக்கள் கூட்டம் குறையவில்லை.
இதைத்தொடர்ந்து டி.சுப்புலாபுரம், மரிக்குண்டு, கன்னியப்பபிள்ளைபட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுகாதாரத்துறையினர் கொரோனா தடுப்பூசிகளை ஆண்டிப்பட்டிக்கு கொண்டு வந்தனர். இந்த தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து நீண்ட நேரம் காத்திருந்த மக்களுக்கு சுகாதாரத்துறையினர் பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதல் தடுப்பூசிகளை கொண்டு வந்து செலுத்தினர். நேற்று ஒரே நாளில் ஆண்டிப்பட்டி நகரில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி செலுத்த ஏராளமான மக்கள் கூடியதால் ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story