193 இடங்களில் நடந்த முகாம்கள் மூலம் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தேனி மாவட்டத்தில் 193 இடங்களில் நடந்த முகாம்கள் மூலம் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டத்தில் நேற்று 193 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்தன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக், பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடந்தன. முகாம் நடந்த இடங்களில் மக்கள் ஆர்வத்தோடு வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
தேனி, பழனிசெட்டிபட்டி, குன்னூர், ஆண்டிப்பட்டி, முதலக்கம்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, ஜி.கல்லுப்பட்டி உள்பட பல்வேறு ஊர்களில் முகாம் நடந்த இடங்களுக்கு கலெக்டர் முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாம் நடந்த இடங்களில் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்த போலீசார் பணியில் ஈடுபட்டனர். இந்த மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 58 ஆயிரத்து 583 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் முதல் தவணை தடுப்பூசியை 35 ஆயிரத்து 56 பேரும், 2&வது தவணை தடுப்பூசியை 23 ஆயிரத்து 527 பேரும் செலுத்திக் கொண்டனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 7 லட்சத்து 56 ஆயிரத்து 827 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசியை 5 லட்சத்து 60 ஆயிரத்து 728 பேரும், 2 தவணை தடுப்பூசியை 1 லட்சத்து 96 ஆயிரத்து 99 பேரும் செலுத்திக் கொண்டனர்.
இதனிடையே தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 389 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் நேற்று குணமாகினர். 97 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story