மின்சாரம் தாக்கி இறந்த யானையை புதைத்த 2 பேர் கைது
கோத்தகிரி அருகே மின்சாரம் தாக்கி இறந்த யானையை புதைத்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே மின்சாரம் தாக்கி இறந்த யானையை புதைத்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
வனத்துறை விசாரணை
கோத்தகிரி வனச்சரகதிற்குட்பட்ட, கெங்கரை ஊராட்சி மெட்டுக்கல் வனப்பகுதிக்குயில் மின்சாரம் தாக்கி இறந்த யானையை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் சிலர் புதைத்ததாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நீலகிரி மாவட்ட உதவி வனபாதுகாவலர் சரவணகுமார், கோத்தகிரி வனச்சர அதிகாரி சிவா ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
யானை புதைப்பு
அதில் அந்தப்பகுதியை சேர்ந்த 2 பேர் மீது வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த 2 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் அதேப்பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 40), காட்டுராஜா (27) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்வரன், காட்டுராஜா மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் அந்தப்பகுதியில் மின்சாரம் தாக்கி பலியான பெண் யானையை யாருக்கும் தெரியாமல் புதைத்தது தெரிந்தது.
2 பேர் கைது
நிதிஷ்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். எனவே வனத்துறையினர் ஈஸ்வரன், காட்டுராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் யானை எங்கே புதைக்கப்பட்டது என்று கேட்டனர். அவர்கள் கூறிய இடத்தில் தோண்டியபோது, அங்கு பெண் யானையின் எலும்புகள் கிடைத்தன. அதை பறிமுதல் செய்த வனத்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, மின்சாரம் தாக்கி காட்டு யானை இறந்ததும், தங்களை வனத்துறையினர் கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் 3 பேரும் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் அந்த யானையின் உடலை புதைத்து உள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்து விடடதால், மற்ற 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story