புகார் பெட்டி
Complaint box
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற `வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நிழற்குடையின்றி தவிக்கும் பயணிகள்
நெல்லை மாவட்ட நீதிமன்றம் எதிரில் இருந்த பயணிகள் நிழற்குடையை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீன முறையில் புதுப்பொலிவுடன் கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றினர். பின்னர் அங்கு பயணிகள் நிழற்குடை கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. இதனால் நிழற்குடை இன்றி தவிக்கும் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் காத்து கிடந்து பஸ் ஏறிச் செல்கின்றனர். எனவே பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-சண்முகசுந்தரம், காமராஜ் நகர்.
--------------------
வீடுகளில் தேங்கும் கழிவுநீர்
பாளையங்கோட்டை பெருமாள்புரம் தாமஸ் தெருவில் கடந்த ஆண்டுக்கு முன்பு வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டது. அப்பகுதியில் பெரும்பாலான வீடுகள் சாலையைவிட தாழ்வான தரைமட்டத்தில் உள்ளதால், கழிவுநீர் சீராக வழிந்தோடாமல் வீடுகளிலேயே தேங்குகிறது. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் முறையாக வழிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-ராஜா, பெருமாள்புரம்.
------------------------------
சாய்ந்த நிலையில் மின்கம்பம்
நெல்லை தச்சநல்லூர் பகுதி வார்டு எண்&1 பஜனை மடத்தெருவில் கிருஷ்ணன் கோவில் பின்புறம் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. அந்த வழியாக பொதுமக்கள் செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
-தங்கராஜ், தச்சநல்லூர்.
---------------------------------------
அமலைச்செடிகள் அகற்றப்படுமா?
விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் அருணாசலபுரம் செல்லும் வழியில் வாய்க்கால் மதகு எதிர்புறத்தில் பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. அந்த பாலம் அமைந்துள்ள பகுதியை சுற்றி அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன. மேலும் இந்த பாலம் தடுப்பு சுவர் இல்லாமல் உள்ளது. இதனால் அந்த வழியில் பயணிக்கும் பயணிகள் அமலைச்செடி எது, பாலம் எது என்று தெரியாமல் கால்வாயில் விழுந்து விடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன், மனைவி, குழந்தைகள் கால்வாயில் விழுந்து விட்டனர். எனவே அமலைச்செடிகளை அப்புறப்படுத்த வேண்டும். தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
- சத்யா, பசுக்கிடைவிளை.
----------------------------------------
செயல்படாத மினி கிளினிக்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஓடைமறிச்சான் பஞ்சாயத்து உடையாம்புளி சமுதாய நலக்கூடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது. இங்கு தினமும் டாக்டர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். தற்போது இந்த கிளினிக் பூட்டி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்கின்றனர். எனவே அம்மா மினி கிளினிக் மீண்டும் செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
-மனோஜ்குமார், உடையாம்புளி.
-----------------------------------------------------
தெருநாய்கள் தொல்லை
தென்காசி மாவட்டம் கடையம் மெயின் ரோடு, தங்கம்மன் கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இவைகள் அந்த வழியாக செல்லும் குழந்தைகள், முதியவர்கள், பெண்களை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் அப்பகுதிகளில் மக்கள் அச்சத்துடனே கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே தெருநாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-திருக்குமரன், கடையம்.
-------------------------------------------
குண்டும், குழியுமான சாலை
ஆலங்குளம் தாலுகா வெங்கடேஸ்வரபுரத்தில் காந்தி நகர் தெருவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாகி நடந்து செல்வதற்கு மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
-மதிசன், வெங்கடேஸ்வரபுரம்.
----------------------------------------------------
போக்குவரத்துக்கு இடையூறாக முட்செடிகள்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம்-மணப்பாடு பைபாஸ் ரோடு பகுதியில் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், சாலையோரம் நடந்து செல்கிறவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களையும் முட்செடிகள் பதம் பார்க்கின்றன. எனவே சாலையோர முட்செடிகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- முத்துகுமார், குலசேகரன்பட்டினம்.
---------------------------------------------
பராமரிப்பில்லாத கழிவறை
விளாத்திகுளத்தில் வேம்பார் சாலையில் உள்ள கழிவறை பராமரிப்பின்றி உள்ளது. மார்க்கெட், தாலுகா அலுவலகம் போன்றவற்றுக்கு செல்வோர் இதை பயன்படுத்தினார்கள். தற்போது இந்த கழிவறையில் நல்லிகள் உடைந்து கிடக்கிறது. தண்ணீர் வசதியும் இல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது. எனவே நோய் பரவாமல் தடுக்க, கழிவறையை சீரமைத்து பொதுமக்களுக்கு பயன்பட செய்ய வேண்டும்.
--ஜெயமணிராஜா, கீழசண்முகபுரம்.
-------------------------------------------
ஆபத்தான மின்கம்பங்கள்
ஸ்ரீவைகுண்டம் தாலுகா அழகப்பபுரம் பஞ்சாயத்து எள்ளுவிளை கிராமத்தில் மின்கம்பங்கள் உள்ளன. இதில் 9 மின்கம்பங்கள் சிமெண்டு பூச்சு இல்லாமல் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கின்றன. எனவே இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்லப்பாண்டி, எள்ளுவிளை.
-------------------------------------------
Related Tags :
Next Story