பெண்ணாடம் அருகே பிளஸ்-1 மாணவி திடீர் சாவு; போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு தாய், உறவினர்கள் மீது வழக்கு
பெண்ணாடம் அருகே திடீரென இறந்த பிளஸ்-1 மாணவியின் உடலை போலீசாருக்கு தெரியாமல் எரித்த தாய், உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்ணாடம்,
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய மனைவி ரஷிதா. இவர்களுடைய மகன் தர்மேஷ். மகள் பிரியதர்ஷினி(வயது 17).
அறிவழகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தர்மேஷ், திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். பிரியதர்ஷினி, அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்&1 படித்து வந்தார்.
பள்ளிக்கூடம் திறந்தநாளில் இருந்து பிரியதர்ஷினி பள்ளிக்கு செல்லவில்லை. இதை ரஷிதா கண்டித்ததால் மனம் உடைந்த பிரியதர்ஷினி கடந்த 23&ந்தேதி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு பெண்ணாடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பிரியதர்ஷினி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
தகனம் செய்ய முடிவு
இந்த நிலையில் நேற்று காலையில் அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரியதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி அவர்கள் போலீசாருக்கு தெரிவிக்காமல், மாணவியின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து தகனம் செய்வதற்கு தகனம் செய்ய முடிவு செய்தனர்.
தாய் மீது வழக்குப்பதிவு
இதுபற்றி அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மாலா பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரியதர்ஷினியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதற்காக உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத உறவினர்கள், திடீரென பிரியதர்ஷினியின் உடலை எடுத்து சென்று எரித்தனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மாலா கொடுத்த புகாரின் பேரில் ரஷிதா, தர்மேஷ் மற்றும் அவரது உறவினர்கள் மீது பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story