ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா


ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 26 Sept 2021 11:18 PM IST (Updated: 26 Sept 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் மயான பிரச்சினை தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பொதுமக்கள் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி

ஆரணியில் மயான பிரச்சினை தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பொதுமக்கள் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயான பிரச்சினை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு பொது மருத்துவமனை அருகில் பெரியார்நகர் உள்ளது. அங்கு 100&க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள்.

பெரியார்நகர் அருகில் ஒரு மயானம் உள்ளது. அந்த மயானம் ஆரணி காந்திநகரில் வசிக்கும் மக்களுக்குரியதாகும். காந்திநகர் மக்கள் இறந்தவர்களின் சடலங்களை பல ஆண்டுகளாக மயானத்தில் அடக்கம் செய்து வருவார்கள்.

அவ்வாறு உடல்களை அடக்கம் செய்யும்போது குடியிருப்பு பகுதியில் வீடுகளின் முன்பாக இறுதிச்சடங்குகளை செய்வதாக கூறப்படுகிறது. மயானப் பகுதியை பெரியார்நகர் மக்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிகிறது. 

இதுகுறித்து காந்திநகர் மக்கள் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு, பெரியார்நகரில் இருக்கும் மயானம் காந்திநகர் மக்களுக்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து மயானத்தை காந்திநகர் பகுதி மக்கள் சுத்தம் செய்து, சுற்றுச்சுவர் கட்ட ஏற்பாடு செய்து வந்தனர். இதற்கு பெரியார்நகர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே, பெரியார்நகர் மக்கள் ஆரணி தாசில்தார், நகராட்சி ஆணையாளர், போலீசார் என பலரிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. 

சுமூக தீர்வு காணப்படும்

இந்தநிலையில் நேற்று திடீரென பெரியார்நகர் மக்கள் 50&க்கும் மேற்பட்டோர் கோட்டை மைதானம் அருகில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். 

அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு இல்லாததால் அலுவலகம் முன்பு பெரியார்நகர் மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துக்குமார், சப்&இன்ஸ்பெக்டர் தருமன் ஆகியோர் விரைந்து வந்து தர்ணா போராட்டம் செய்த பெரியார்நகர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 மக்களுக்கு குடியிருப்பும் அவசியம், மயானமும் அவசியம் ஆகும். இதுதொடர்பாக தாசில்தாருக்கு தகவல் தெரிவித்து, சமரச பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்கிறோம்.

 29-ந்தேதி சுமூக தீர்வு காணப்படும். அதுவரை போராட்டம் நடத்துவதை கை விடுங்கள், எனப் போலீசார் கூறினர்.

பரபரப்பு 

இதையடுத்து பெரியார்நகர் மக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தர்ணா போராட்டத்தால் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story