வீடு புகுந்து திருடிய வாலிபர்


வீடு புகுந்து திருடிய வாலிபர்
x
தினத்தந்தி 26 Sept 2021 11:24 PM IST (Updated: 26 Sept 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபரை பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.

சிக்கல்:
கீழ்வேளூர் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபரை பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
வீடு புகுந்து திருட்டு
கீழ்வேளூர் அருகே வெண்மணி ஊராட்சி கீழகாவாலக்குடி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது37). விவசாயி. இவர் நேற்று முன் தினம் இரவு தனது மனைவி சாந்தி, குழந்தையுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.  நள்ளிரவு 1 மணிக்கு வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 1½ பவுன் நகையை திருடியுள்ளனர்.
 மேலும் தூங்கி கொண்டிருந்த செந்தில்குமாரின் மனைவி சாந்தியின் கழுத்தில் கிடந்த தாலியை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது திடுக்கிட்டு கண் விழுத்து பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்து திருடன், திருடன் என்று சத்தம் போட்டுள்ளார். இதனால் மர்ம நபர்கள் சாந்தியின் வாயில் துணியை வைத்து அமுக்கி தாக்கி உள்ளனர். 
 திருடனை விரட்டி பிடித்தனர்
இதை பார்த்து சாந்தியின் குழந்தை அழுதுள்ளது. குழந்தை அழும் சத்தம் கேட்டு வாசலில் படுத்திருந்த செந்தில்குமார் எழுந்து வந்து பார்த்த போது நகைகளையுடன் மர்ம நபர்கள், அவரை தள்ளி விட்டு வீட்டின பின்புறமாக வெளி வந்து வயல் வெளியில் இறங்கி தப்பி ஓடி உள்ளனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மர்ம நபர்களை விரட்டி சென்று ஒருவனை மடக்கி பிடித்தனர். பின்னர் அவனை மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பொதுமக்கள், திருடனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து திருடனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், கீழ்வேளூர் அருகே வடக்காலத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் ரஞ்சித் (வயது 27) என்பது தெரியவந்தது. கிராம மக்கள் தாக்கியதில் காயமடைந்த ரஞ்சித் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story