தினத்தந்தி புகார் பெட்டி


அரியலூர்
x
அரியலூர்
தினத்தந்தி 26 Sept 2021 11:48 PM IST (Updated: 26 Sept 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான தார்ச்சாலை 
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் தங்கசாலை என்ற கிராமத்தின் வழியாக செல்லும் தார்ச்சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் சேற்றிலும், தண்ணீரிலும் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தங்கசாலை, திருச்சி.

புதர்மண்டி கிடக்கும் சுகாதார வளாகம் 
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், கோவண்டாக்குறிச்சியில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டு முறையான பராமரிப்பு இல்லாததால் புதர்மண்டி தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், கோவண்டாக்குறிச்சி, திருச்சி. 

அதிகரிக்கும் குரங்குகள் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா பெரிய கடை வீதி பெரிய அரிசிகாரத்தெருவில் குரங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த குரங்குகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து தின்பண்டங்கள், மளிகை பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்று விடுகின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள மாமரம், கொய்யா மரங்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை கடிக்க வருவது போல் அச்சுறுத்தி வருகிறது. எனவே இப்பகுதியில் உள்ள குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்க வேண்டும். 
வனிதா, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை.

உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் 
புதுக்கோட்டை மாவட்டம்,  கேப்பரையில் ஆலங்குடி அறந்தாங்கி பிரிவு சாலையில் இரவில் போதிய வெளிச்சம் இல்லாமல் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி அப்பகுதியில் குற்ற செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
குமார், கேப்பரை, புதுக்கோட்டை. 

மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் 
அரியலூர் மாவட்டம், ராயம்புரம் பஞ்சாயத்திற்குட்பட்ட காவேரிபாளையம் கிராமத்தில் சாலைகள் மண் சாலைகளாக உள்ளது. இதனால் மழை நாட்களில் அவை சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும். 
பொதுமக்கள், காவேரிபாளையம், அரியலூர். 

மழை மானி அமைக்கப்படுமா? 
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அதிகாரப்பூர்வ மழை மானி இல்லை. இதனால் இப்பகுதியில்  எவ்வளவு மழை பதிவாகியது என்று அறிந்துக்கொள்ள முடிவதில்லை. மழை மானி வைத்தால் இப்பகுதியில் எவ்வளவு மழை பதிவாகியது என்று விவசாயிகள் அறிந்து அதற்கு தகுந்தார்போல் விவசாயிகள் பயிரிடுவர் . எனவே அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் மழை மானி நிறுவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
நஸ்ருதீன் ஷா, கீழப்பழுவூர், அரியலூர். 

தேங்கி நிற்கும் சாக்கடையால் நோய் பரவும் அபாயம் 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் நக்கசேலம் கிராமத்தில் அம்பேத்கர் நகரில் நக்கசேலம்-செட்டிகுளம் செல்லும் சாலையில் புதிய கால்வாய் 75 மீட்டர் கட்டியுள்ளனர். அந்த கால்வாயில் இருந்து தண்ணீர் வெளியே வர வழியில்லாமல் சாக்கடை நீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் நோய் தொற்று அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், நக்கசேலம், பெரம்பலூர்.

எரியாத மின் விளக்குகளால் குற்ற செயல்கள் நடக்க வாய்ப்பு 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம், அல்லிநகரம் கிராம ஊராட்சியில், அரியலூரில் இருந்து ஆலத்தூர் கேட் செல்லும் சாலையில்  எரியாமல் இருக்கும் மின் விளக்குகளால் அப்பகுதியில் குற்ற செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பி. மணிவேல், அல்லிநகரம், பெரம்லூர். 

சாக்கடைநீர் கலந்து வரும் குடிநீர் 
கரூர் மாவட்டம்,  பெரிய கோதூர் என்.எஸ்.பி. நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அப்பகுதியில் குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் இந்த நீரை குடிக்கும்போது  உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சாக்கடை நீர் கலந்து வருவதால் இப்பகுதியில் சுகதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குணசேகரன், பெரிய கோதூர், கரூர்.

பழுதடைந்த மின் வயரால் பொதுமக்கள் அச்சம் 
திருச்சி 61வது வார்டு காவேரி நகா் 2வது தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் மின் இணைப்பு வயர் அறுந்து அதனை முடிந்து வைத்துள்ளனர். இதனால் அவ்வப்போது அதில் இருந்து தீப்பொறி வருவதுடன் மின்சாரம் இருக்கும்போது, மின்வயர் அறுந்து கீழே விழுந்தால்  உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், திருச்சி.

சாலையில் பள்ளம் 
திருச்சி மாவட்டம்,  மலைக்கோட்டை உள்வீதி  மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தெருவில் சாலையின் நடுவில்  பாதாள சாக்கடை அமைந்துள்ளது. இந்த பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை பெய்யும்போது, அதன் மூடி வழியாக கழிவுநீர் வெளியே சாலையில் செல்கிறது. மேலும் பாதாள சாக்கடையின் மூடி பழுதடைந்து பள்ளமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் செல்லும் சிலர் இந்த பள்ளத்தில் விட்டு கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சுவாமிநாதன், திருச்சி. 

தூர்ந்துபோன பாலம் 
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், கருப்பூர் அருகே காடபிச்சம்பட்டியில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலம் தூர்வாரப்படாததால் தூர்ந்துபோய் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மழை பெய்யும் போது பாலத்தின் வழியாக மழை நீர் செல்ல முடியாமல் சாலையில் மழைநீர் செல்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தம்பிதுரை, காடபிச்சம்பட்டி, திருச்சி. 

நிறைவடையாத பள்ளி கட்டுமான பணி 
திருச்சி மாநகராட்சி உறையூர் 59 வது வார்டு பாண்டமங்கலம் வடக்கு நடுநிலைப்பள்ளி பல ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. இங்கு 1 முதல் 8 வகுப்பு வரை உள்ளது. இதில் ஏழை எளிய குழந்தைகள் படித்து வருகின்றனர். கட்டிடம் பழுதடைந்துள்ளது என்று கூறி பள்ளி கட்டிடத்தை இடித்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.  இன்று வரை கட்டுமான பணி நிறைவு அடையவில்லை.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஆனந்தன், உறையூர்,  திருச்சி .

பெயர்பலகை வைக்கப்படுமா? 
திருச்சி மாநகராட்சி 51வது வார்டில் பிஷப் குளத்தெருக்கள் என இரண்டு தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களுக்கு பெயர் பலகை வைக்காததால் புதிதாக முகவரி  தேடி வருபவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.  எனவே‌ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாமுவேல், பிஷப் குளத் தெரு, திருச்சி. 

மின்வெட்டால் மாணவர்கள் பாதிப்பு 
திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் முத்தரசநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காமராசர்புரம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மின்சாரன பொருட்கள் பழுதடைவதுடன் ஆன்லைன் வகுப்புகள் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மிகவும் சிரமாக உள்ளது. மேலும் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், முத்தரசநல்லூர், திருச்சி. 

மின்விளக்கு அமைக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில்  வே.துறையூர் மற்றும் பல கிராமங்கள் உள்ளன. இந்த சாலையில் மின்கம்பங்கள் இருந்தும் அதில் மின் விளக்குகள் இல்லை. இதனால் அப்பகுதியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ராஜேந்திரகுமார், வே.துறையூர், திருச்சி. 

Next Story