ஓசூர் அருகே பரிதாபம் சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மோதல் நண்பர்கள் 3 பேர் சாவு
ஓசூர் அருகே சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நண்பர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் விபத்தில் ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்தார்.
ஓசூர்:
ஓசூர் அருகே சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நண்பர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் விபத்தில் ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நண்பர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் பகுதியை சேர்ந்தவர்கள் சயீப்கான் (வயது 20), ஆபித் (20) மற்றும் தர்மபுரி மாவட்டம் அதகபாடியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பூவரசன் (19). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இவர்கள், பாகலூர் பகுதியில் பட்டறையிலும், கார் மெக்கானிக்காவும் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது.
நேற்று மாலை 3 பேரும், ஒரே மோட்டார் சைக்கிளில் மாலூரில் இருந்து பாகலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தனர். பாகலூரில், மாலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் அருகில் வந்த போது, எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது.
3 பேர் சாவு
இதில் தூக்கி வீசப்பட்ட சயீப்கான், ஆபித் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பூவரசனை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீசார் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பூவரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சயீப்கான், ஆபித் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில், ஆட்டோ டிரைவருக்கும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆட்டோ மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story