3-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


3-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 26 Sep 2021 7:15 PM GMT (Updated: 26 Sep 2021 7:15 PM GMT)

3-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.

3-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

காரைக்குடி, 

3-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.

3-வது கட்ட தடுப்பூசி முகாம்

காரைக்குடியில் பொது சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 3-வது கட்ட தடுப்பூசி சிறப்பு முகாம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ மாங்குடி முன்னிலை வகித்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கடந்த 12-ந்தேதி அன்று கொரோனா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அன்றைய தினம் சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் 750மையங்களில் நடந்த முகாமில் 44 ஆயிரத்து 611 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 19-ந்தேதி அன்று நடைபெற்ற 2-வது கட்ட தடுப்பூசி முகாமில் 200 மையங்களில் 23 ஆயிரத்து 138 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 
 இன்று(அதாவது நேற்று) நடைபெற்ற 3-வது கட்ட தடுப்பூசி முகாமில் சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 450 முகாம்கள் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
 
1,200 பேர் நியமனம்

இதில் நகராட்சி பகுதியில் 81 இடங்களிலும், ஊரக மற்றும் பேரூராட்சி பகுதியில் 369 இடங்களிலும் இந்த முகாம் நடந்தது. காரைக்குடி நகராட்சி பகுதியில் இதுவரை 60 ஆயிரம் பேர் வரை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இன்னும் 35 ஆயிரம் பேர் தடுப்பூசி போட வேண்டியது உள்ளது. தடுப்பூசி மையங்களில் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள் 1200 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 இவ்வாறு அவர் பேசினார். 
முகாமில் மருத்துவதுறை துணை இயக்குனர் ராம்கணேஷ், இணைஇயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், காரைக்குடி நகராட்சி ஆணையாளர் சுதா, நகராட்சி மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், பூச்சியியல் மருத்துவர் ரமேஷ், டாக்டர்கள் கண்ணுச்சாமி, கார்த்திகேயன், அனிதா, மருத்துவ கண்காணிப்பு ஆய்வாளர்கள் கோதண்டம், வீரையா, காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story