ஆயுதங்களுடன் திரிந்த 2 பேர் கைது
திருச்சியில் பழிக்கு பழி தீர்க்கும் விதமாக பயங்கர ஆயுதங்களுடன் திரிந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி
திருச்சி மாநகரில் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் ஸ்ரீரங்கம் போலீஸ் எல்லைக்குட்பட்ட திருவானைக்காவல் மணல்மேடு என்ற இடத்தில் வெட்டுவாள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சந்தேகத்திற்கிடமாக 2 பேர் சுற்றித் திரிவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், தனிப்படை போலீசார் விரைந்து சென்று அங்கு ஆயுதங்களுடன் திரிந்த ரவுடிகள் மணல்மேடு வடக்கு 5 வது பிரகாரத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 20), சுரேஷ் (33) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான இருவர் மீதும் ஸ்ரீரங்கம் போலீசார் 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கொலைக்கு பழிக்கு பழி
விசாரணையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மணல்மேடு பகுதியில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக, பழிக்கு பழி வாங்கும் நோக்கத்தில் திட்டம் தீட்டி கொலை செய்யும் எண்ணத்துடன் ஆயுதங்களுடன் திரிந்தது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் பழிக்கு பழி வாங்கும் முன்பே ஆயுதங்களுடன் திரிந்த நபர்களை கைது செய்து, குற்றச் சம்பவத்தை தடுத்துள்ளனர். அதற்காக தனிப்படையினரை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார்.
Related Tags :
Next Story