தள்ளுவண்டிகளை அப்புறப்படுத்திய நகராட்சியை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்


தள்ளுவண்டிகளை அப்புறப்படுத்திய நகராட்சியை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 Sep 2021 8:17 PM GMT (Updated: 26 Sep 2021 8:17 PM GMT)

தள்ளுவண்டிகளை அப்புறப்படுத்திய நகராட்சியை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல் செய்தனர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ் உள்ளே செல்லும் வழியில் சாலையோரத்தில் தள்ளுவண்டிகளில் கம்மங்கூழ், பழங்கள், கோழி மற்றும் மீன் வறுவல் வைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த தள்ளுவண்டி கடைகள் இடையூறாக இருப்பதாக கூறி, நேற்று காலை பெரம்பலூர் நகராட்சி ஊழியர்கள் திடீரென்று அந்த தள்ளுவண்டிகளை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி, நகராட்சி அலுவலகம் அருகே இழுத்து சென்றனர். இதனை கண்ட தள்ளுவண்டி உரிமையாளர்கள் மற்றும் சக தள்ளுவண்டி வியாபாரிகள் நகராட்சியை கண்டித்து, அந்த தள்ளுவண்டிகளுடன் திடீரென்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து இந்த செயல்களில் ஈடுபடும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், சுப்பையன் மற்றும் போலீசார் அங்கு வந்து, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் யாருக்கும் இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து வருகிறோம். ஆனால் எங்களின் தள்ளுவண்டிகளை நகராட்சி ஊழியர்கள் அப்பறப்படுத்தியதோடு, சேதப்படுத்தியுள்ளனர். எங்களை தொடர்ந்து அந்தப்பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். அப்போது புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தினர்.

Next Story