குமரியில் பலத்த மழை
குமரி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. இதனால், சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. இதனால், சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
வெளுத்து வாங்கிய மழை
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் 4 நாட்கள் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் சில இடங்களில் லேசான புயல் வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் கனமழை பெய்தது.
முன்னதாக மாவட்டத்தில் நேற்று காலையில் வழக்கம் போல் வெயில் அடித்து கொண்டிருந்தது. மதியம் வானத்தில் திடீரென மேக மூட்டம் தோன்ற தொடங்கியது. மதியம் 12 மணியளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கன மழையாக மாறி வெளுத்து வாங்கியது. மதியம் தொடங்கிய மழை இரவு வரை கனமழையாகவும், சாரல் மழையாகவும் நீடித்தது.
சாலைகளில் வெள்ளம்
தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் கவலையடைந்தனர்.
நாகர்கோவில் மாநகரில் உள்ள முக்கிய சாலைகள், தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், சாலைகளில் நடந்து சென்றவர்களும், வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர். இதுபோல் மார்த்தாண்டம், திருவட்டார், தக்கலை உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
மழையுடன் பலத்த காற்று வீசியதால் மாவட்டத்தின் சில பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. அவற்றை தீயணைப்பு வீரர்கள் எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றினர். நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நள்ளிரவிலும் மழை நீடித்ததால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால் அணைகளில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்படுகிறது.
Related Tags :
Next Story