தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படுமா?
தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து சிக்களூர் கிராமத்துக்கு 9-ம் எண் டவுன் பஸ் காலையில் மட்டும் வந்து செல்கிறது. மற்ற நேரங்களில் டவுன் பஸ்கள் எதுவும் வருவது இல்லை. சிக்களூர் கிராமத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மாணவ மாணவிகள், ஏழை எளிய பொதுமக்கள், முதியோர், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்காக அரூர் நகரம் சென்று வர பஸ் வசதி இல்லை. எனவே போக்குவரத்து அதிகாரிகள் அரூர்- சிக்களூர் இடையே புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்க வேண்டும். இல்லை என்றால் நரிப்பள்ளி வரை வரும் நகர பஸ்களை சிக்களூர் வரை வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏ.பாலகிருஷ்ணன், சிக்களூர், தர்மபுரி.
===
வேகத்தடை வேண்டும்
சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா சந்தைபேட்டையில் இருந்து அங்காளம்மன் கோவில் செல்லும் சாலையில் 5 லாந்தர் எனப்படும் புராதன விளக்கு அமைந்துள்ள பகுதியில் சாலை வளைவாக உள்ளது. இந்த வளைவான பகுதியில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக வந்து கீழே விழுந்து அடிக்கடி விபத்துக்களில் சிக்குகின்றனர். இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் மாலை நேரங்களில் சிலர் வேகமாக வாகனத்தில் செல்வதால் நடந்து செல்வோர் மிகவும் அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே உடனடியாக இந்த பகுதியில் உடனடியாக வேகத்தடை அமைத்து விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சந்தைபேட்டை, சேலம்.
===
மூடப்படாத கழிவுநீர் கால்வாய்
தர்மபுரி நகராட்சி ராஜகோபால் கவுண்டர் பூங்காவின் அருகில் கழிவுநீர் கால்வாயின் மூடி பழுதடைந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் மூடி திறந்து கிடப்பதுடன், அந்த பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோர் திறந்து கிடக்கும் இந்த கால்வாய்க்குள் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே ஏதும் அசம்பாவித சம்பவம் நடக்கும் முன் அந்த கழிவுநீர் கால்வாயின் மூடியை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.கலைநிதி, தர்மபுரி.
===
நோய் பரவும் அபாயம்
சேலம் அழகாபுரம் காட்டூர் பகுதியில் சாக்கடை கால்வாய் பணி தொடங்கப்பட்டு பாதி தெருவிற்கு மட்டும் போடப்பட்டு உள்ளது. மேலும் இடையில் மண்ணை கொட்டி உள்ளனர். மழைக்காலங்களில் மழைநீர் வெளியே செல்ல வழி இல்லாமல் அந்த பகுதியிலே குளம்போல் தேங்கி நோய் பரவும் அபாயத்தில் உள்ளது. எனவே நோய்த்தொற்று பரவும் முன்பாக மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், காட்டூர், சேலம்.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அழகாபுரம் புதூர் திருப்பதி நகர் 7-வது குறுக்குத்தெருவில் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சாலையில் விடுகிறார்கள். அந்த கழிவுநீரில் கொசுக்கள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே நோய் பரவும் முன் இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோவிந்தன், அழகாபுரம், சேலம்.
===
குவிந்து கிடக்கும் குப்பைகள்
சேலம் நரசோதிப்பட்டி 3-வது வார்டு இந்திய வங்கி காலனி நுழைவு வாயிலில் 2 குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த தொட்டிகள் அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. குப்பை அள்ள வருவோர் அதனை கண்டுகொள்வது கிடயாது. இதனால் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. நோய் பரவவும் அபாயம் உள்ளது. இது சம்பந்தமாக மாநகராட்சி அதிகாரியிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. எனவே அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
===
மின்விளக்கு வேண்டும்
சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் கரிக்காப்பட்டி பஸ் நிலையம் அருகில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கவேண்டும். இந்த பகுதியில் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளிச்சம் இன்றி மிகவும் சிரமப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.சரவணன், கரிக்காப்பட்டி, சேலம்.
சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை மகுடஞ்சாவடி மேம்பாலத்தில் இரவு நேரங்களில் தெருவிளக்கு எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அந்த மேம்பாலத்தின் கீழே உள்ள பூங்காக்கள் பராமரிப்பின்றி காடு போல் காட்சி அளிக்கிறது. எனவே அந்த பகுதியில் பூங்காவை சீரமைக்கவும், தெருவிளக்கு எரியவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பிரபு, மகுடஞ்சாவடி, சேலம்.
===
ஜல்லிகற்கள் பெயர்ந்த சாலை
நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள்கோவில் மேட்டில் இருந்து வானக்காரன்புதூர் வழியாக தோட்டக்கூர்பட்டி வரை செல்லும் 5 கிலோ மீட்டர் தூரம் கிராம சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.ஆர்.லட்சுமிநாராயணன், பெருமாள்கோவில்மேடு, நாமக்கல்.
===
பஸ்கள் நின்று செல்ல வேண்டும்
சேலம் அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை வழியாக செல்லும் பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் நின்று சென்றன. கடந்த சில வாரங்களாக அந்த வழியாக அரசு பஸ்கள் நிற்காமல் சென்றுவிடுகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் அந்தவழியே செல்லும் பஸ்கள் நிற்காமல் செல்கின்றன. இதனால் வேலைக்கு சென்று வீடு திரும்புபவர்கள், பொதுக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதி பஸ் நிறுத்தங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.சல்மாபானு, பொன்னம்மாபேட்டை, சேலம்.
Related Tags :
Next Story