சேலத்தில் நிதி நிறுவனங்கள் மூலம் ரூ.4½ கோடி மோசடி; கோவை வாலிபர் கைது-ஒரு ஆண்டுக்கு பிறகு சிக்கினார்
சேலத்தில் நிதி நிறுவனங்கள் மூலம் ரூ.4 கோடியே 50 லட்சம் மோசடி செய்த புகாரில் கோவையை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் ஒரு ஆண்டுக்கு பிறகு போலீசில் சிக்கினார்.
சேலம்:
சேலத்தில் நிதி நிறுவனங்கள் மூலம் ரூ.4 கோடியே 50 லட்சம் மோசடி செய்த புகாரில் கோவையை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் ஒரு ஆண்டுக்கு பிறகு போலீசில் சிக்கினார்.
நிதி நிறுவனங்கள்
கோவை பீளமேடு பி.ஆர்.புரத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மகன் கவுதம் ரமேஷ் (வயது 40). இவர், தனது கூட்டாளிகள் 13 பேருடன் சேர்ந்து தமிழ்நாடு, கேரளாவில் பல்வேறு இடங்களில் 3 நிதி நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார். அந்த நிறுவனங்களில் பணம் முதலீடு செய்வோருக்கு ஒரு வருடத்தில் 4 மடங்கு பணத்தை திரும்ப தருவதாக கூறி பல கோடிக்கணக்கில் முதலீட்டை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதை நம்பி கேரளாவில் மட்டும் 80 ஆயிரத்திற்கு அதிகமானோர், அந்த நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்ததாக தெரிகிறது.
தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கவுதம் ரமேசின் நிதி நிறுவனங்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். ஒரு கட்டத்தில் பொதுமக்கள் முதலீடு செய்த பணத்தை சுருட்டி கொண்டு, அந்நிறுவனங்களை மூடிவிட்டனர். இதனால் கேரளா, தமிழ்நாட்டில் கவுதம் ரமேஷ் உள்பட 13 பேர் மீது மோசடி புகார்கள் கொடுக்கப்பட்டன. அதில், சுமார் ரூ.4 ஆயிரத்து 700 கோடி அளவிற்கு மோசடி செய்ததாக கூறப்பட்டது. இதனால் அந்தந்த மாவட்டங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வாலிபர் கைது
சேலத்தில் மாதேஷ் என்பவர் தலைமையில் 70 பேர், தங்களிடம் ரூ.4 கோடியே 50 லட்சம் மோசடி செய்துவிட்டதாக சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து பண மோசடி செய்த கவுதம் ரமேசை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கில் கவுதம் ரமேசின் கூட்டாளிகளான மேலும் சிலரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். அதில், கோவை மாவட்டம் இருகூர் ஈ.பி.காலனி மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்த காளிமுத்து மகன் கனகராஜ் (25) என்பவரை நேற்று இன்ஸ்பெக்டர் புஷ்பராணி தலைமையில் போலீசார் கைது செய்தனர். கடந்த ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்த அவர், தற்போது போலீசில் சிக்கியுள்ளார். அவரிடம் உதவி கமிஷனர் பாபு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கி கணக்கு முடக்கம்
மேலும், கனகராஜிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், ஏ.டி.எம்.கார்டுகள் மற்றும் சொத்து ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரது வங்கி கணக்கை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் மேலும் தலைமறைவாக உள்ளவர்களையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story