சென்னை விமான நிலையத்தில் மஸ்கட் விமானத்தில் எந்திர கோளாறு; பயணிகள் வாக்குவாதம்


சென்னை விமான நிலையத்தில் மஸ்கட் விமானத்தில் எந்திர கோளாறு; பயணிகள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 27 Sept 2021 5:11 PM IST (Updated: 27 Sept 2021 5:11 PM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் மஸ்கட் செல்ல இருந்த விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். 18 மணிநேரம் தாமதத்துக்கு பிறகு விமானம் புறப்பட்டு சென்றதால் 156 பயணிகள் அவதி அடைந்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஓமன் நாட்டு தலைநகா் மஸ்கட்டுக்கு நேற்று முன்தினம் மாலை விமானம் செல்ல வேண்டும். ஆனால் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டு இருப்பதால், அதை சரிசெய்த பின்னர் இரவு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்ய சோதனைகளை முடித்துக்கொண்டு தயாராக இருந்த 156 பயணிகள் ஓய்வுகூடத்தில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

வாக்குவாதம்

ஆனால் இரவு 9 மணி வரை விமானம் புறப்பட்டு செல்வதற்கான அறிகுறி இல்லாததால் ஆத்திரமடைந்த பயணிகள், விமான நிறுவன கவுண்ட்டரில் இருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். 10 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கிறோம். உடனே விமானம் புறப்பட்டு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகளை போலீசாரும், பாதுகாப்பு அதிகாரிகளும் அமைதிபடுத்தினா்.

இதையடுத்து விமான நிலையத்தில் காத்து இருந்த 156 பயணிகளும் சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். எந்திர கோளாறு ஏற்பட்ட விமானத்தில் பழுதை சரி செய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டனா். ஆனால் உரிய உதிரிப்பாகங்கள் இல்லாததால் உடனடியாக பழுதை சரிசெய்ய முடியவில்லை.

18 மணிநேரம் தாமதம்

இந்தநிலையில் மஸ்கட்டில் இருந்து நேற்று காலை சென்னை வந்த விமானத்தில் உதிரிப்பாகங்கள் வந்தன. இதையடுத்து உதிரிப்பாகங்களை கொண்டு என்ஜினீயர்கள் விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர்.

இதையடுத்து ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 156 பயணிகளும் மீண்டும் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனா். சுமார் 18 மணி நேர தாமதத்துக்கு பிறகு சென்னையில் இருந்து அந்த விமானம் மஸ்கட்டுக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறு காரணமாக அதில் செல்ல இருந்த பயணிகள், சென்னையில் 18 மணிநேரம் அவதி அடைந்தனர்.

Next Story