மறியலில் ஈடுபட முயன்ற 556 பேர் கைது


மறியலில் ஈடுபட முயன்ற 556 பேர் கைது
x
தினத்தந்தி 27 Sept 2021 6:18 PM IST (Updated: 27 Sept 2021 6:18 PM IST)
t-max-icont-min-icon

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மத்திய அரசை கண்டித்து திருப்பூர், அவினாசி, பல்லடம், ஊத்துக்குளியில் மறியலில் ஈடுபட முயன்ற மத்திய தொழிற்சங்கத்தை சேர்ந்த 556 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மத்திய அரசை கண்டித்து திருப்பூர், அவினாசி, பல்லடம், ஊத்துக்குளியில் மறியலில் ஈடுபட முயன்ற மத்திய தொழிற்சங்கத்தை சேர்ந்த 556 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெயில் மறியல் போராட்டம்
விவசாயிகளின் வாழ்வை அழித்து ஒழிக்கும் வேளாண் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக மாற்றும் தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். இந்திய நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யக்கூடாது. பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும், டெல்லியில் கடந்த 10 மாதங்களாக போராடும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்தும் மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்தம் மற்றும் ரெயில் மறியல் போராட்டம் நேற்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி ரெயில் மறியல் போராட்டத்துக்காக திருப்பூர் குமரன் சிலை முன் தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று காலை திரண்டனர். இதையொட்டி வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் மகேந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ரெயில் நிலையத்தின் நுழைவு பாதை முன்பு இரும்பு தடுப்புகள் வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பேராட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். சந்திரன் சி.ஐ.டி.யு., ரங்கசாமி எல்.பி.எப்., ஈஸ்வரன்ஐ.என்.டி.யு.சி., முத்துசாமி எச்.எம்.எஸ்., மனோகர் எம்.எல்.எப். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
280 பேர் கைது
இந்த போராட்டத்துக்கு தி.மு.க. கூட்டணி கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். அதன்படி தி.மு.க. திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் காமராஜ், காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நாகராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியபடி ரெயில் நிலையம் நோக்கி செல்ல முற்பட்டனர். அதற்குள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வடக்கு போலீசார் ரெயில் நிலைய நுழைவு பகுதியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதன்படி 29 பெண்கள் உள்பட 280 பேரை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 
அவினாசி
அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதில் அனைத்து தொழிற்சங்கம் மற்றும் விவசாய கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 
மறியலில் ஈடுபட்ட 95 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்குளி
ஊத்துக்குளி தாலுகாவிற்கு உட்பட்ட செங்கப்பள்ளி, பல்லகவுண்டன்பாளையம் ஊத்துக்குளி ஆர்.எஸ், பகுதிகளில் பெரும்பாலான கடைகள் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தது. மேலும் காலை ரெயில் மறியல் செய்வதற்காக ஊத்துக்குளி ஆர்.எஸ்.குன்னத்தூர் சாலையில் இருந்து பேரணியாக முழக்கமிட்டு வந்த விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்களை ஊத்துக்குளி ரெயில் நிலையத்தின் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மேலும் ரெயில் மறியலுக்கு முயன்ற 28 பெண்கள் உள்பட 111 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். 
இந்த போராட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பல்லடம்
பல்லடத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள், காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் மற்றும் தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் சார்பாக பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த நிலையில் திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோவை திருச்சி மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதையடுத்து சாலை மறியல் செய்த 70 பேரை பல்லடம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 
ஆர்ப்பாட்டம்
 பல்லடம் அருகே உள்ள கே.எஸ்.என்.புரம் தபால் அலுவலகம் முன்பு உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து தலைமையில், மத்திய அரசை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மத்திய அரசின் 3 வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கோஷங்கள் எழுப்பினர். அதன்படி திருப்பூர், அவினாசி, பல்லடம், ஊத்துக்குளியில் மொத்தம்  461 பேர் கைது செய்யப்பட்டனர். 

-------------------


ஊத்துக்குளி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்
-----------
அவினாசியில் மறியல் போராட்டம் நடந்தபோது எடுத்த படம்.

பல்லடம் அருகே, உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்

----
பல்லடம் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்


Next Story