தூத்துக்குடியில் பலத்த காற்று வீசியதால் 245 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடியில் பலத்த காற்று வீசியதால் 245 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடி:
தூத்துக்குடி பகுதியில் நேற்று பலத்த காற்று வீசியதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மேலும், தென்னை மரம் ஒடிந்து விழுந்தது.
விசைப்படகுகள்
வங்கக்கடலில் உருவான குலாப் புயல் ஆந்திராவுக்கும், ஒடிசாவுக்கும் இடையே கரையை கடந்தது. இதனால் மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 245 விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. அனைத்து விசைப்படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
பலத்த காற்று
இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கடுமையான வெயில் மக்களை வாட்டி எடுத்தது. இதனால் மக்கள் வெளியில் நடமாடவே சிரமப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மாவட்டத்தில் பலத்த காற்று வீசத்தொடங்கியது. இந்த காற்று நேற்றும் நீடித்தது. இதனால் புழுதி வாரி இறைத்தது. வாகனஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
இந்த காற்று காரணமாக தூத்துக்குடியில் உள்ள ஒரு வீட்டில் தென்னை மரம் ஒடிந்து விழுந்தது. அதேபோன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலும் ஒரு மரம் சரிந்து விழுந்தது. இதனை தூத்துக்குடி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று அப்புறப்படுத்தினர்.
நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. ஆனால், மழை பெய்யவில்லை.
Related Tags :
Next Story