பொக்லைன் எந்திரத்தை சிறைப்பிடித்த கிராம மக்கள்
குளத்தில் மண் அள்ளியபோது பொக்லைன் எந்திரத்தை கிராம மக்கள் சிறைப்பிடித்தனர்.
சின்னாளப்பட்டி:
சின்னாளப்பட்டி அருகே தொப்பம்பட்டி மலையடிவாரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தில், பொக்லைன் எந்திரம் மூலம் கிராவல் மண் அள்ளப்படுவதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கிராம மக்கள் குளத்துக்கு திரண்டு சென்றனர்.
இதனை கண்ட மண் அள்ளும் கும்பலை சேர்ந்தவர்கள், கிராம மக்களை மிரட்டினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையே மண்ணை கீழே கொட்டி விட்டு, டிப்பர் லாரியை எடுத்து கொண்டு டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதேபோல் பொக்லைன் எந்திரத்தையும் ஆபரேட்டர் ஓட்டி தப்பி செல்ல முயன்றார். ஆனால் பொதுமக்கள் மறித்து, பொக்லைன் எந்திரத்தை சிறைப்பிடித்தனர்.
மேலும் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், பொக்லைன் எந்திர டயரை கிழித்து பஞ்சர் ஆக்கினர். இதனையடுத்து மண் அள்ளிய கும்பலை சேர்ந்தவர்களும், பொக்லைன் எந்திர ஆபரேட்டரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்பாத்துரை போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொல்லப்பட்டியை சேர்ந்த பொக்லைன் எந்திர உரிமையாளர் பாண்டி (வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும் மண் அள்ளிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோல் பொக்லைன் எந்திரத்தை பஞ்சர் ஆக்கியதாக தொப்பம்பட்டியை சேர்ந்த முருகன் (46) கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக கிராம மக்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story