தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 27 Sept 2021 8:15 PM IST (Updated: 27 Sept 2021 8:15 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி தாலுகா கீழப்பாப்பாக்குடி கிராமத்தில் உள்ள ஆலங்குளம் சாலையில் குடிநீர் திட்டத்திற்காக குழி தோண்டப்பட்டது. இந்த பணி முடிந்து பல மாதங்கள் ஆகியும் குழி மூடப்படவில்லை. இதனால் இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழை பெய்தால் தண்ணீர் அதில் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் முக்கூடல், ஆலங்குளத்திற்கு செல்வதற்கு சிரமமாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-சுரேஷ் சீனித்துரை, கீழப்பாப்பாக்குடி.

டவுன் பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

பாபநாசம் அரசு பணிமனையில் இருந்து நெல்லை சந்திப்புக்கு 36-ஜி அரசு டவுன் பஸ் கடந்த 30 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் அந்த பணிமனையில் இருந்து கூனியூர் பணிமனைக்கு மாற்றப்பட்டு, சில மாதங்களில் இயக்கப்பட்டது. அதன்பின்னர் பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அந்த பஸ்சை நம்பி இருந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் அவதிப்படுகிறார்கள். ஆகவே, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆறுமுகம், கல்லிடைக்குறிச்சி.

எரியாத தெருவிளக்குகள்

பாளையங்கோட்டை சமாதானபுரம் காமராஜ் காலனியில் உள்ள 5 ெதரு விளக்குகள் கடந்த ஒரு மாதமாக எரியாமல் உள்ளது. இதனால் வேலை முடித்துவிட்டு இரவில் வீடு திரும்பவர்கள்  அவதிப்படுகிறார்கள். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-ஆனந்த், சமாதானபுரம்.

இடிக்கப்பட்ட தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

நெல்லை டவுன் கல்லணை தெருவில் உள்ள வாய்க்கால் தூர்வாரும் பணிக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாய்க்காலின் சுற்றுச்சுவர் ஒரு பகுதி பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை அந்த தடுப்புச்சுவர் சீரமைக்கப்படவில்லை. மேலும் வாய்க்காலில் ஏராளமான செடிகள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.  
மேலும், நெல்லை கலெக்டர் அலுவலகம் மற்றும் கொக்கிரகுளம் ஆகிய பகுதிகளில் இருந்த பயணிகள் நிழற்குடை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிக்காக இடிக்கப்பட்டது. ஆனால், அந்த பணி முடிந்தும் இன்னும் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- ஜாபர் அலி, நெல்லை டவுன்.

படுமோசமான சாலை 

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் திருமலையப்பபுரம் விலக்கில் இருந்து செட்டிகுளம் விலக்கு வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சாலை குண்டும், குழியுமாக மோசமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள், சைக்கிள்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் கீழே விழுந்து காயம் அடையும் சம்பவங்கள் நடக்கிறது. வாகன ஓட்டிகள் நலன் கருதி இந்த சாலையை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டுகிறேன்.
-அம்ஜத், முதலியார்பட்டி.

படித்துறை சீரமைக்கப்படுமா?

கடையம் ஒன்றியம் மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூர் கிராமத்தின் அருகில் கடனாநதி ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் கரையில் உள்ள படித்துறை அண்மை காலமாக சேதமடைந்து உள்ளது. இதனால் குளிக்க செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

தார்சாலை வசதி வேண்டும்

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம் 2-வது வார்டு முத்தம்மாள் காலனி 3-வது தெரு முதல் மேற்கு பகுதி வரை சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமான உள்ளது. இந்த தெரு வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். இங்கு தார்சாலை வசதி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-மாணிக்கம், முத்தம்மாள் காலனி.

குப்பையால் சுகாதார கேடு

கோவில்பட்டி முத்துநகர் விநாயகர் கோவில் அருகில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. அந்த பகுதியில் உள்ள குப்பைகள் கோவில் அருகே கொட்டப்படுகிறது. அந்த குப்பைகளில் பன்றிகள், நாய்கள் அட்டகாசம் செய்கிறது. மேலும் காற்று அடித்தால் குப்பைகள் பறந்து அருகில் உள்ள வீடுகளில் விழுகிறது. மழை பெய்தால் குப்பைகள் மூலம் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, அந்த குப்பைகளை அகற்றவும், இனி அங்கு குப்பை கொட்டுவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அகிலா, கோவில்பட்டி.

மின்கம்பம் மாற்றப்படுமா?

தூத்துக்குடி இந்திரா நகர் 2-வது தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர். மின்சாரத்துறையினர் இந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
- ஆறுமுகசெல்வம், தூத்துக்குடி.

Next Story