தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம் தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேச்சு
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 202 வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 9-ந் தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் அனல்பறக்கும் பிரசாரம் தற்போது தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
நேற்று விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட நரையூர், கள்ளப்பட்டு, இளங்காடு, குடுமியாங்குப்பம், தனசிங்குப்பாளையம், பெத்துரெட்டிக்குப்பம் ஆகிய இடங்களில் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி திறந்த வேனில் பிரசாரம் செய்து பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
அடிப்படை வசதிகள் கிடைக்கும்
அப்போது அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்றி வருகிறோம்.
குறிப்பாக மகளிர்களுக்கு நகர பஸ்களில் இலவச பயணம், ரேஷன் கடைகளில் கொரோனா காலங்களில் 14 வகையான பொருட்கள், ரூ.4 ஆயிரம் நிவாரணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை செய்து காட்டியுள்ளார் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உள்ளாட்சி அமைப்பு என்பது முக்கியம். இதில் போட்டியிடுபவர்களை சரியாக தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான், நம் பகுதிக்கு தேவையான சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கும். அதை செய்து கொடுப்பவர்கள் தி.மு.க. கூட்டணி கட்சியினராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் டாக்டர் இரா.லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story