வனத்துறையினரை கண்டித்து வருசநாட்டில் 39 மலைக்கிராம மக்கள் மறியல்


வனத்துறையினரை கண்டித்து வருசநாட்டில் 39 மலைக்கிராம மக்கள் மறியல்
x
தினத்தந்தி 27 Sept 2021 10:17 PM IST (Updated: 27 Sept 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற வனத்துறையினர் நெருக்கடி கொடுத்து வருவதை கண்டித்து வருசநாட்டில் 39 மலைக்கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வருசநாடு-தேனி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடமலைக்குண்டு:
வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற வனத்துறையினர் நெருக்கடி கொடுத்து வருவதை கண்டித்து வருசநாட்டில் 39 மலைக்கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வருசநாடு-தேனி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மலைக்கிராம மக்கள்
தேனி மாவட்டம் வருசநாடு அருகே மேகமலை ஊராட்சியில் இந்திராநகர், அரசரடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் உள்ள பகுதி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மலைக்கிராம மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற வனத்துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருவதாகவும், அங்கு விவசாயம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மலைக்கிராம மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அவர்கள் ஏற்கனவே கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
இந்தநிலையில் மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட 39 மலைக்கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஒன்றிணைந்து நேற்று வருசநாட்டிற்கு திரண்டு வந்தனா். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் முன்பு தேனி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 
பட்டா வழங்க வேண்டும்
இந்த மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் போஸ், மேகமலை ஊராட்சி மன்ற தலைவர் பால்கண்ணன், வனக்குழு தலைவர் குணசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், மலைக்கிராமங்களில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வரும் மலைக்கிராம மக்களுக்கு வன உரிமை சட்டத்தின்படி பட்டா வழங்கக்கோரியும், மலைக்கிராம மக்கள் விவசாயத்தில் ஈடுபட தடை விதித்த வனத்துறையினரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். 
இதற்கிடையே மறியல் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வருசநாடு கிராமத்திற்கு வந்த பஸ், கார், லாரிகளை முன்கூட்டியே நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும் வருசநாட்டில் இருந்து தேனிக்கு சென்ற வாகனங்களை மாற்றுப்பாதை வழியாக செல்ல ஏற்பாடு செய்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த மறியல் காரணமாக வருசநாடு-தேனி சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மலைக்கிராம மக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் மறியலை கைவிடவில்லை. இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 98 பெண்கள் உள்பட 351 பேரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 
மலைக்கிராம மக்களின் இந்த சாலை மறியல் போராட்டத்தால் வருசநாட்டில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story