கூடலூர் அருகே மோட்டார் சைக்கிள்-கார் நேருக்குநேர் மோதல்; பால் வியாபாரி உள்பட 2 பேர் பலி


கூடலூர் அருகே மோட்டார் சைக்கிள்-கார் நேருக்குநேர் மோதல்; பால் வியாபாரி உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 27 Sept 2021 10:21 PM IST (Updated: 27 Sept 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் நேருக்குநேர் மோதிய விபத்தில் பால் வியாபாரி உள்பட 2 பேர் பலியாகினர்.

கூடலூர்:
கூடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் நேருக்குநேர் மோதிய விபத்தில் பால் வியாபாரி உள்பட 2 பேர் பலியாகினர். 
 பால் வியாபாரி
தேனி மாவட்டம் கூடலூர் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கர்ணன் (வயது 50). பால் வியாபாரி. கன்னிகாளிபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (45). விவசாயி. நண்பர்களான இவர்கள் 2 பேரும், கழுதைமேடுபுலம் பகுதியில் உள்ள கண்ணனுக்கு சொந்தமான தோட்டத்துக்கு நேற்று சென்றனர். 
பின்னர் அங்கிருந்து அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கூடலூர் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தம்மணம்பட்டி பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.
2 பேர் பலி
அப்போது எதிரே சிவகாசியில் இருந்து குமுளி நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த கர்ணனும், கண்ணனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 
இதேபோல் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் காரும் சேதமடைந்தது. அதை ஓட்டி வந்த சிவகாசியை சேர்ந்த சுப்பையா (35) லேசான காயத்துடன் உயிர்தப்பினார். 
 டிரைவர் கைது 
இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, கூடலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 
பின்னர் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவர் சுப்பையாவை கைது செய்தனர். 
 குடும்பம்
விபத்தில் பலியான கர்ணனுக்கு வசந்தா (42) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இதேபோல் கண்ணனுக்கு லட்சுமி (35) என்ற மனைவியும், 2 மகள்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் கூடலூரில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story