பெண்களை கேலி செய்த வாலிபர்களை மரத்தில் கட்டி வைத்த பொதுமக்களால் பரபரப்பு
பெண்களை கேலி செய்த வாலிபர்களை மரத்தில் கட்டி வைத்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் சின்ன மோட்டூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் உறவினர்களுடன் தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சரக்கு ஆட்டோவில் சென்றார். அங்கிருந்து அவர்கள் நேற்று முன்தினம் மாலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். போச்சம்பள்ளி களர்பதி ஏரிக்கரை அருகே ஆட்டோ சென்ற போது காரில் வந்த 7 வாலிபர்கள் ஆட்டோவில் இருந்த பெண்களை கேலி, கிண்டல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் கிண்டல் செய்தபடி வந்ததால் டிரைவர் ஆட்டோவை ஓரமாக நிறுத்தினார். அப்போது காரில் வந்த நபர்களும் காரை நிறுத்தி விட்டு ஆட்டோ டிரைவர் முருகனிடம் தகராறு செய்து, அவரை தாக்கினார்கள்.
இதை பார்த்து அங்கு பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் மது போதையில் தகராறு செய்ததுடன், பெண்களை கேலி, கிண்டல் செய்த 3 பேரை பிடித்தனர். இதை பார்த்த காரில் வந்த மற்றவர்கள் தப்பி ஓடி விட்டார்கள். இதையடுத்து பிடிபட்ட 3 பேரையும் பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்தனர். தகவல் அறிந்து மத்தூர் போலீசார் அங்கு வந்து 3 பேரையும் மீட்டனர். விசாரணையில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூரை சேர்ந்த கவுதம் (வயது 20), கார்த்திக் (25), வல்லரசு (19) என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story