திருவாரூர் மாவட்டத்தில் 49 இடங்களில் ரெயில் சாலை மறியல்


திருவாரூர் மாவட்டத்தில் 49 இடங்களில் ரெயில் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 Sept 2021 10:29 PM IST (Updated: 27 Sept 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் 49 இடங்களில் ரெயில், சாலை மறியல் நடைபெற்றது. இதில் செல்வராஜ் எம்.பி. உள்பட 1390 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்:
மத்திய அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் 49 இடங்களில் ரெயில், சாலை மறியல் நடைபெற்றது. இதில் செல்வராஜ் எம்.பி. உள்பட 1390 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெயில் மறியல் 
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவதாக அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் சாலை, ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று திருவாரூர் அருகே சிங்களாஞ்சேரி ரெயில்வே கேட்டில் எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலை விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர் வழிமறித்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார்.  செல்வராஜ் எம்.பி. முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. ஆடலரசன், தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன், தொ.மு.ச. மாவட்ட தலைவர் குருநாதன், மாவட்ட பொருளாளர் தமிழரசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குமரராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலை மறியல் 
இதனை தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்ட நாகை எம்.பி. செல்வராஜ் உள்பட 100 பேரை கைது செய்தனர். இதனால் திருவாரூர்-மன்னார்குடி சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. திருவாரூர் பழைய பஸ் நிலையம் பெரியார் சிலை ரவுண்டானாவில் விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல், விவசாயிகள் நல சங்க தலைவர் சேதுராமன், தி.க. மாவட்ட துணைத்தலைவர் அருண்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து திருவாரூர் டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்தனர்.
கடைகள் அடைப்பு
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக திருவாரூர் மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு, விஜயபுரம் வர்த்தக சங்கம் ஆதரவு தெரிவித்து மதியம் 12 வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. இதனால் எந்தநேரமும் பரபரப்பாக காணப்படும் கடைவீதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது. பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்ட நிலையில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
மன்னார்குடி 
மன்னார்குடியில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று காலை 11 மணிவரை அடைக்கப்பட்டிருந்தன. இதனால் காலையில் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மன்னார்குடி கீழ்ப்பாலத்தில் நடைபெற்ற சாலைமறியலுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் வை.செல்வராஜ் தலைமை தாங்கினார். மன்னார்குடி காளவாய்கரையில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்திற்கு தி.மு.க. நகர விவசாய சங்க அமைப்பாளர் ஏ.பி.அசோக் தலைமை தாங்கினார். இதேபோல மேலப்பாலத்திலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த சாலை மறியலால் தஞ்சை, கும்பகோணம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், முத்துப்பேட்டை சாலைகளில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் அருகே உள்ள சேந்தங்குடியில்  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இதில்  இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர். இதேபோல் கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில்  விவசாய சங்கங்கள் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ.,  தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன் மற்றும் பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். 
முத்துப்பேட்டை நகரத்தில் வர்த்தக கழகம், வர்த்தக  சங்கம், பெரியக்கடைத்தெரு வர்த்தகக்கழகம் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்தனர். முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கடைத்தெருவில் விவசாய சங்க முன்னாள் தலைவர் நீலமோகன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் 4 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து தடைப்பட்டது.
நன்னிலம்
திருவாரூர் மாவட்டம் பேரளம், கொல்லுமாங்குடி ஆகிய இடங்களில் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் ஒப்பாரி வைத்து நூதன முறையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் 1 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பேரளத்தில் நடந்த சாலை மறியல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  கட்சி விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தியாகு ரஜினிகாந்த், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் தீன கவுதமன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கொல்லுமாங்குடியில் நடந்த சாலை மறியல்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் தலைமையில் நடந்தது. 
திருமக்கோட்டை
அகில இந்திய விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திருமக்கோட்டை கடைவீதியில் பஸ் மறியல் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோட்டூர் ஒன்றிய செயலாளர் பரந்தாமன் தலைமை தாங்கினார். இதில் திருமக்கோட்டை, மேலநத்தம், புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள்  போலீசார் கைது செய்தனர்.   திருமக்கோட்டையில் உள்ள 120 கடைகள் அடைக்கப்பட்டன. 
குடவாசல் 
விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் குடவாசல் பஸ் நிறுத்தம் அருகே நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். இதில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 
மணக்கால் அய்யம்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆறுமுகம் தலைமையிலும், பிலாவடியில் மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ்வரி தலைமையிலும் நடந்த மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். எரவாஞ்சேரி கடைத்தெருவில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 
நீடாமங்கலம்
நீடாமங்கலத்தில் நேற்று ெரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் தமிழார்வன் தலைமை தாங்கினார். அப்போது எர்ணாகுளத்திலிருந்து காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயில் மறிக்கப்பட்டது. தொடர்ந்து நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். நீடாமங்கலம் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
கோட்டூர்
கோட்டூரில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மாரிமுத்து எம்.எல்.ஏ., கோட்டூர் ஒன்றிய செயலாளர் எம்.செந்தில்நாதன், ஒன்றிய தலைவர் மணிமேகலை முருகேசன், தி.மு.க. ஒன்றிய துணைச்செயலாளர் ஆனந்தன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா இளரா, கோட்டூர் கூட்டுறவு சங்க தலைவர் சிவசண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தட்டாங்கோவிலில் நடைபெற்ற மறியலில் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயராமன்  உள்பட பலர் கலந்து கொண்டனர். பெருகவாழ்ந்தான் கடைவீதியில் போராட்டம் நடந்தது. கோட்டூர், பெருகவாழ்ந்தான், களப்பால் ஆகிய பகுதியில் வர்த்தக சங்கத்தினர் கடைகளை அடைத்து இருந்தனர். இதில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.  திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் விவசாய சங்க கூட்டமைப்பின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் சாமி. நடராஜன் முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க.  மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சிக்கந்தர், முன்னாள் எம்.எல்.ஏ.,  உலகநாதன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டனர். இதேபோல ஆலத்தம்பாடி கடை தெருவில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ராமகிருஷ்ணன்  தலைமை தாங்கினர். இதேபோல விளக்குடி,  பிச்சன் கோட்டகம் உள்ளிட்ட 6 இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது இதில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 
1390 பேர் கைது 
திருவாரூர் மாவட்டத்தில் 47 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் 29 இடங்களில் நடந்த மறியலில் 226 பெண்கள் உள்பட 1230 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் 2 இடங்களில் நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தில் 9 பெண்கள் உள்பட 160 பேரை கைது செய்தனர்.

Next Story