சிதம்பரத்தில் மதுபாட்டில்களை மாலையாக அணிந்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சிதம்பரத்தில் மதுபாட்டில்களை மாலையாக அணிந்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2021 10:40 PM IST (Updated: 27 Sept 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி மதுபாட்டில்களை மாலையாக அணிந்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம், 

 சிதம்பரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சட்டமன்ற தொகுதி தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் செந்தில், இளைஞரணி பொதுச்செயலாளர் சங்கர்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் தேவா கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். 

இதில் இந்து மக்கள் கட்சியினர் தங்களது கழுத்தில் மதுபாட்டில்களை மாலையாக அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், சிதம்பரம் பஸ் நிலையம் பகுதியில்  3 டாஸ்மாக் கடைகள் உள்ளன. 

பொதுமக்களிடம் தகராறு

இங்கு மதுவாங்கி குடித்துவிட்டு வருபவர்கள், பொதுமக்களிடமும், பயணிகளிடமும் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் அவர்கள் பெரும் அச்சம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சிதம்பரம் பஸ் நிலைய பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்ற வேண்டும் என்றனர். தொடர்ந்து அவர்கள், தங்களது கோரிக்கை குறித்த மனுவை சப்-கலெக்டர் மதுபாலனிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

Next Story