கே.வி.குப்பம் அருகே அமரர் ஊர்தியை சிறைபிடித்து உறவினர்கள் மறியல்
கே.வி.குப்பம் அருகே மின்சாரம்தாக்கி மின்சாரம்தாக்கி எலக்ட்ரீசியன் இறந்ததற்கு நியாயம்கேட்டு உறவினர்கள் அமரர் ஊர்தியை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் அருகே மின்சாரம்தாக்கி மின்சாரம்தாக்கி எலக்ட்ரீசியன் இறந்ததற்கு நியாயம்கேட்டு உறவினர்கள் அமரர் ஊர்தியை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்சாரம் தாக்கி பலி
கே.வி.குப்பத்தை அடுத்த சென்னங்குப்பத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கதிர்வேல் (வயது 33) எலக்ட்ரீசியன். திருமணம் ஆகாதவர். கடந்த மாதம் 9-ந் தேதி அதே ஊரில் பாபு என்பவருடைய வயலில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியை ஒட்டிச்சென்ற மரக்கிளையை வெட்டினார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 25-ந் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப் பதிவு செய்தார்.
அமரர் ஊர்தியை பிடித்தனர்
பிரேத பரிசோதனைக்கு பிறகு கதிர்வேலின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க அரசு இலவச அமரர் ஊர்தியில் நேற்று மாலை கொண்டு வந்தனர். இதை அறிந்த கதிர்வேலின் உறவினர்கள் மாலை 6 மணி அளவில் அரசு அமரர் ஊர்தி வரும் வழியில் காட்பாடி ரோடு பி.கே.புரம் மின்சார அலுவலகம் எதிரில் திரண்டனர்.
அவர்கள் கதிர்வேல் இறப்பிற்கு நியாயம் கேட்டும், இதற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சவ ஊர்தியை மறித்து சிறைப்பிடித்து சுமார் 100 பேர் தரையில் அமர்ந்து நிவாரணம் கேட்டு மறியல் போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தாசில்தார் சரண்யா, குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி உள்ளிட்ட போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதைத் தொடர்ந்து போராட்டம் செய்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.
Related Tags :
Next Story