ரெயில்-பஸ் மறியல்; கடைகள் அடைப்பு


ரெயில்-பஸ் மறியல்; கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 27 Sept 2021 10:52 PM IST (Updated: 27 Sept 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ரெயில்- பஸ் மறியல் மற்றும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் 510 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை:
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ரெயில்- பஸ் மறியல் மற்றும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் 510 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெயில் மறியல்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி அனைத்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் மயிலாடுதுறை ெரயில் நிலையம் அருகே மாப்படுகை ெரயில்வே கேட்டில் தண்டவாளத்தில் அமர்ந்து காலை 10.30 மணி அளவில்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதியம் 12.45 மணியளவில் சென்னையில் இருந்து வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ெரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் துரைராஜ், கோபிகணேசன், ராமலிங்கம், டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் வக்கீல் வேலுகுபேந்திரன், மக்கள் நீதி மையம் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட பொருளாளர் ஆக்கூர் ஷாஜகான் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தினர், விவசாய சங்கத்தினர் உள்பட பலர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 கடைகள் அடைப்பு
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின்சார திருத்த மசோதாவை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் 1.05 மணிக்கு ரெயில் புறப்பட்டு மயிலாடுதுறை ரெயில் நிலையத்துக்கு சென்றது. இந்த ெரயில் மறியல் போராட்டம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் 80 பெண்கள் உள்பட 280 பேரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறை நகரில் நேற்று காலை 11 மணி வரை  ஜவுளி கடைகள், நகை கடைகள், பாத்திரக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. 
கொள்ளிடம்
 கொள்ளிடம் கடைவீதியில் நடந்த சாலை மறியலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேலன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க தலைவர் கேசவன், செயலாளர் சுந்தரலிங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சிவராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் 35 உள்பட 75 பேரை கைது செய்தனர். சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 சீர்காழி
 சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் அகில இந்திய விவசாய சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். விவசாய சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் இமயவரம்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகி இளங்கோவன், மக்கள் அதிகாரம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில நிர்வாகி முசாகுதீன், பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்லப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி பிரபாகரன், அசோகன், ஞானபிரகாசம், விவசாய சங்க மாவட்ட தலைவர் வீரராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி காமராஜ் உள்பட  200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
போக்குவரத்து பாதிப்பு
சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கவிதா, சிங்காரவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 இந்த சாலை மறியல் போராட்டத்தால் சிதம்பரம்- மயிலாடுதுறை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக சீர்காழி பகுதியில் குறைவான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தரங்கம்பாடி
 தரங்கம்பாடி ராஜீவ்புரம் முக்கூட்டில் நடந்த சாலை மறியலுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட  தலைவர் சிம்சன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் காபிரியேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் மற்றும் விவசாய சங்கம் வாலிபர் சங்கம், மாணவர் சங்கங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 90 பேரை கைது செய்தனர். மறியலால் நாகை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் பொறையாறு தபால் நிலையம் முன்பு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் நடந்த. ஆர்ப்பாட்டத்திற்கு செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் ஜென்சன் தலைமை தாங்கினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.
குத்தாலம்
குத்தாலம் பஸ்  நிலையம் எதிரே நடந்த சாலை மறியல் போராட்டத்தில்  விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வைரவன் மற்றும் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மாரிமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்வள்ளி மற்றும் போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 இடங்களில் பஸ் மறியலும், 1 இடத்தில் ரெயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. இதில் 80 பெண்கள் உள்பட 510 பேரை கைது செய்தனர்.

Next Story