உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் கூட்டுறவு நிர்வாகக்குழு கலைக்கப்படும். அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு
உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் கூட்டுறவு நிர்வாகக்குழு கலைக்கப்படும்
ஜோலார்பேட்டை
உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் கூட்டுறவு நிர்வாக குழு கலைக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தி.மு.க.சார்பில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. நல்லதம்பி, ஜோலார்பேட்டை நகர பொறுப்பாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் கலந்துகொண்டு ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர் ஆகியோருக்கும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.
அப்போது அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
வெற்றிபெற செய்யவேண்டும்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக விரைவில் குறைந்ததற்கு தமிழக முதல்-அமைச்சரின் நடவடிக்கை தான் காரணம். மேலும் உலகமே உற்று நோக்கும் வகையில் அதிக தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. மக்களின் உயிரைக் காக்கும் அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. நாங்கள் இன்னும் முழுமையாக பணியாற்றவில்லை. அதற்குள்ளாக தேர்தல் வந்துவிட்டது.
இந்த 150 நாட்களில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய பணி சிறப்புக்குரியது. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெறச்செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு கிடைக்காதவர்கள் ஓய்வின்றி தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு தேர்தல் பணியை செய்யாமல் உள்ள நிர்வாகிகள் கட்டம் கட்டப்படுவார்கள்.
கலைக்கப்படும்
உள்ளாட்சி தேர்தல் முடிவு வெளியானவுடன் 3 தினங்களில் கூட்டுறவு சங்க நிர்வாக குழு கலைக்கப்பட்டு புதிய நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப்படும். அதேபோல் 32 வாரியங்களும் கலைக்கப்பட்டு இந்த உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு பதவிகள் வழங்கப்படும். 10 ஆண்டு காலம் பதவியில் இருந்தவர்கள் அகற்றப்பட்டு இந்த ஆட்சியில் 5 வருடமாவது உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
எனவே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்து அனைவரையும் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி்னார்.
Related Tags :
Next Story