தி மு க தோல்வி பயத்தின் காரணமாக அ தி மு க வேட்பாளர்களின் வேட்பு மனுவை நிராகரித்துள்ளனர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


தி மு க தோல்வி பயத்தின் காரணமாக அ தி மு க வேட்பாளர்களின் வேட்பு மனுவை நிராகரித்துள்ளனர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 27 Sept 2021 10:57 PM IST (Updated: 27 Sept 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

தி மு க வினர் தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாக அ தி மு க வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை நிரகாரித்துள்ளனர் என அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்

கள்ளக்குறிச்சி

வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி அருகே மாடூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், செயலாளருமான குமரகுரு தலைமை தாங்கினார். தேர்தல் பொறுப்பாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான எம்.சி.சம்பத், விஜயபாஸ்கர், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

தோல்வி பயம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுவை முழுமையாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் தி.மு.க. நிர்வாகிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு சில அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்பு மனுவை நிராகரித்துள்ளனர். தோல்வி பயத்தின் காரணமாக அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்பு மனுவை நிராகரித்துள்ளனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம். இதற்கு துணை போன அதிகாரிகள் சட்டரீதியாக சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அச்சுறுத்தி அ.தி.மு.க. தொண்டர்களை தொட்டு பார்க்க முடியாது. வழக்கு போட்டாலும் பயந்து விடமாட்டோம். 

ஜனநாயக முறைப்படி

நான் முதல்-அமைச்சராக இருந்த போது அராஜகம் இல்லாமல் ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்தினோம். எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நந்தவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 3-வது வார்டில் 14 ஓட்டுகள், 10-வது வார்டில் 11 ஓட்டுகள் அ.தி.மு.க.வினரைவிட தி.மு.க. வேட்பாளர்கள் கூடுதலாக பெற்றிருந்தனர். இதற்கு நாங்கள் ஏதாவது செய்தோமா, அதை ஜனநாயக முறைப்படி நேர்மையாக அறிவித்தோம். 

தேசிய கால்நடை பூங்கா

கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கி உள்ளோம். அதேபோல் கள்ளக்குறிச்சியில் மக்கள் உயர்ந்த மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும், மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்கும் வகையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையுடன் கூடிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேசிய கால்நடை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அரசு மக்களுக்கு பல்வேறு சாதனைகளை செய்துள்ளது.
மக்களோடு நெருங்கி பழகக்கூடிய உள்ளாட்சி தேர்தல் என்பதால் நமது வேட்பாளர்கள் கவனமாக செயல்பட வேண்டும். வாக்குச்சாவடி மையத்தில் சரியான முகவர்களை நியமிக்க வேண்டும். இல்லை என்றால் கள்ள ஓட்டு போட்டு விடுவார்கள். அதேபோல் வாக்கு எண்ணும் மையத்திலும் விழிப்போடு செயல்பட வேண்டும். இல்லையென்றால் தி.மு.க.வினர் கவனத்தை சிதற வைத்து ஓட்டுகளை மாற்றி விடுவார்கள். 
இவ்வாறு அவர் கூறினார். 


Next Story