தேனி, கம்பம் உள்பட 25 இடங்களில் விவசாய சங்கத்தினர் சாலை மறியல்
மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினரும், தி.மு.க., கூட்டணி கட்சியினரும் தேனி, கம்பம் உள்பட 25 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், 1,752 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி:
மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினரும், தி.மு.க., கூட்டணி கட்சியினரும் தேனி, கம்பம் உள்பட 25 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், 1,752 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல்
மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இந்த போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து அக்கட்சியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதன்படி தேனி மாவட்டத்தில், மத்திய அரசை கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும், மின்சார திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், தொழிலாளர் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
தேனி, கம்பம்
தேனி நேரு சிலை சிக்னல் அருகில் நடந்த சாலை மறியலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெருமாள், தி.மு.க. நகர பொறுப்பாளர் பாலமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 68 பெண்கள் உள்பட 193 பேரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம் காந்திசிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பகுதி செயலாளர் லெனின், காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டடம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் காந்தி சிலை பகுதியில் இருந்து அரசமரம், போக்குவரத்து சிக்னல், ஏ.கே.ஜி. திடல் வழியாக ஊர்வலமாக கம்பம்மெட்டு சாலை பிரிவு வந்தடைந்தனர். அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட 230 பேர் கைது செய்யப்பட்டனர்.
1,752 பேர் கைது
இதேபோல், போடி, தருமத்துப்பட்டி, சிலமலை, பண்ணைப்புரம், தேவாரம், சின்னமனூர், உத்தமபாளையம், ஓடைப்பட்டி, காமாட்சிபுரம், ஆண்டிப்பட்டி, தெப்பம்பட்டி, வருசநாடு, பெரியகுளம், தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 25 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. பின்னர் மறியலில் ஈடுபட்ட 389 பெண்கள் உள்பட மொத்தம் 1,752 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மறியலின் போது புதிய வேளாண் சட்டங்கள், மின்சார திருத்தச் சட்டம், தொழிலாளர் திருத்தச் சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் விவசாய சங்கத்தினர், எதிர்க்கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர்.
போடி
போடியில் விவசாய சங்கத்தினர் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில், முன்னாள் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. ஒன்றிய செயலாளருமான லட்சுமணன், நகர செயலாளர் செல்வராஜ், தேனி ஒன்றிய தலைவர் சக்கரவர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினசபாபதி, மாவட்ட பிரதிநிதி அய்யப்பன், முன்னாள் நகர செயலாளர்கள் ராஜா ரமேஷ், முகமது பசீர், காங்கிரஸ் நகர தலைவர் முபாரக் மந்திரி, மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி, மதுரை மாவட்ட செயலாளர் முகமது ரசூல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, போடி வர்த்தகர் சங்க மண்டபத்தில் தங்க வைத்தனர். அப்போது அங்கு வந்த தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், மறியலில் ஈடுபட்ட கைது செய்யப்பட்டவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
Related Tags :
Next Story