ஓடும்பஸ்சில் பெண்ணிடம் 6 பவுன் நகை திருட்டு
ராமநாதபுரத்தில் ஓடும்பஸ்சில் பெண்ணிடம் 6 பவுன் நகை திருடப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் ஓடும்பஸ்சில் பெண்ணிடம் 6 பவுன் நகை திருடப்பட்டு உள்ளது.
கூட்ட நெரிசல்
ராமநாதபுரம் மாவட்டம் குதக்கோட்டை அருகே உள்ளது ஈசுப்புளிவலசை. இந்த ஊரை சேர்ந்தவர் கோபால் மனைவி பூமயில் (வயது70). இவர் ராமநாதபுரத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த தனது பேரனை பார்ப்பதற்காக பஸ்சில் வந்துள்ளார். ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக ராமநாதபுரம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி சென்றுள்ளார்.
பஸ்சில் சென்றபோது பழைய பஸ்நிலையம் பகுதியில் 2 பெண்கள் கூட்ட நெரிசலில் ஏறி உள்ளனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பூமயில் பரிதாபப்பட்டு அந்த பெண் வைத்திருந்த குழந்தையை வாங்கி வைத்துள்ளார். கலெக்டர் அலுவலகம் வந்ததும் குழந்தையை வாங்கி கொண்டு அவசர அவசரமாக 2 பெண்களும் இறங்கி கொண்டனர். இதன்பின்னர் பூமயில் வீட்டிற்கு சென்று சேலையை மாற்றியபோது தாலி சங்கிலியில் இருந்து தங்க காசு மட்டும் விழுந்துள்ளது. இதனால் தாலியை பார்த்தபோது தாலியை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கூட்ட நெரிசலில் குழந்தையை கொடுப்பதுபோல நடித்து 6½ பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்து பூமயில் அளித்த புகாரின் அடிப்படையில் ராம நாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரத்தில் கடந்த 2 மாதமாக வாரத்திற்கு 3 சம்பவங்கள் இதுபோன்று நடந்து வருகிறது. ஓடும் பஸ்சில் நகையை திருடுவதும், பஸ்நிலையத்தில் முண்டியடித்து கொண்டு ஏறுவதுபோன்று நகையை திருடுவதும், நகை நன்றாக இருக்கிறது காட்டுங்கள் என்று கழற்றி வாங்கி கொண்டு ஓடுவதும் தொடர் கதையாகி வருகிறது.
கோரிக்கை
இதன்காரணமாக மக்கள் பஸ்நிலையத்திற்கு செல்வதற்கும், பஸ்சில் பயணம் செய்வதற்கும் அச்சமடைந்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ராமநாதபுரத்தில் சாதாரண சீருடையில் பெண் போலீசாரை பயணிகளை போல பஸ்சில் பயணிக்க வைத்து திருட்டு கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், அதன்பின்னரும் இந்த சம்பவங்கள் தொடர்ந்து வருவதால் மக்களிடையே அச்சம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் உடனடி யாக நடவடிக்கை எடுத்து திருட்டு கும்பலை பிடித்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story