கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 இடங்களில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி சாலை மறியல்-எம்.எல்.ஏ. உள்பட 803 பேர் கைது


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 இடங்களில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி சாலை மறியல்-எம்.எல்.ஏ. உள்பட 803 பேர் கைது
x
தினத்தந்தி 27 Sept 2021 11:09 PM IST (Updated: 27 Sept 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 இடங்களில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 803 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி:
சாலை மறியல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில், 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார ஒழுங்குமுறை மசோதாவை திரும்ப பெற வேண்டும். நாட்டின் பொது சொத்துக்களை தனியாருக்கு விற்கக்கூடாது. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷ்ங்கள் எழுப்பப்பட்டன.
ஓசூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம் நடந்தது. ரெயில் நிலையம் முன்பு நடந்த இந்த போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திடீரென ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் அந்த பகுதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 
எம்.எல்.ஏ. கைது
இதையடுத்து ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன், விவசாயிகள் சங்க மாநில தலைவர் லகுமய்யா, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மாதையன், தொ.மு.ச. மாவட்ட நிர்வாகி கோபாலகிருஷ்ணா உள்பட 365 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டது தனியார் மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.
தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி அப்துல்ரஹ்மான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், வட்ட செயலாளர் வெங்கடேஷ், நிர்வாகி அனுமப்பா உள்பட 39 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் கண்ணு, வெங்கடாசலம், சுபித்ரா, மங்கம்மா, சேகர், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 83 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டத்தில் 9 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் மொத்தம் 803 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story