வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி மறியலில் ஈடுபட்ட 1,246 பேர் கைது


வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி மறியலில் ஈடுபட்ட 1,246 பேர் கைது
x
தினத்தந்தி 27 Sept 2021 11:23 PM IST (Updated: 27 Sept 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் அவசர மசோதாக்களை ரத்து செய்ய வேண்டும், இலவச மின்சாரம் ரத்து செய்யும் மின்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு பகுதிகளில் நடந்த மறியலில் 1,246 பேர் கைதாகினர்.

திருவண்ணாமலை,
வேளாண் அவசர மசோதாக்களை ரத்து செய்ய வேண்டும், இலவச மின்சாரம் ரத்து செய்யும் மின்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு பகுதிகளில் நடந்த மறியலில் 1,246 பேர் கைதாகினர்.

ஆர்்ப்பாட்டம்

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் முன்பு  தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மண்டலத் தலைவர் துரைசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர். 

முன்னதாக அவர்கள் திருவண்ணாமலை ரவுண்டானா அருகில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் இருந்து ஊர்வலமாக பஸ் நிலையத்துக்கு வந்தனர்.
அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வேளாண் விரோத 3 அவசர சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை மறுக்கும் மின்சார சட்டம் 2020-ஐ ரத்து செய்ய வேண்டும். பொதுத் துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 130 பேரை  திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் கைது செய்தனர். 



வந்தவாசி

வந்தவாசி தேரடியில் கரும்பு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் அரிதாசு தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக அஞ்சல் அலுவலகம் எதிரில் கழுத்தில் ஏர்க்கலப்பையை சுமந்து தார் சாலையை விவசாயிகள் உழுதவாறு முழக்கங்களை எழுப்பினர். இதனால் ஒருமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்தில், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் ரஹ்மதுல்லாஹ் சீனுகுமார், விவசாய சங்க மாநில துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் மோகன், மாநிலக் குழு உறுப்பினர் விஜயா, சிவராமன் எல் பி.எப். கென்னடி, கிருஷ்ணன் உள்பட கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 91 பேரை கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

ரெயில் மறியல்களம்பூர் நகர கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட விவசாய அணி செயலாளர் சி. நாராயணசாமி தலைமையில் களம்பூரில் உள்ள ஆரணி ரோடு ெரயில் நிலையத்தில் ரெயில் முன்பாக போராட்டம் நடத்தினர். 15-க்கும் மேற்பட்டோர் களம்பூர் போலீசார் கைது செய்தனர்.

கலசபாக்கம், காஞ்சி, கடலாடி, நாயுடுமங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் போன்ற பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கடைகளை அடைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்டத்தில் மொத்தம் 20 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 283 பெண்கள் உட்பட 1,246 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story