பாலாற்றில் மூழ்கிய அண்ணன்,தம்பி பிணமாக மீட்பு


பாலாற்றில் மூழ்கிய அண்ணன்,தம்பி பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 27 Sept 2021 11:41 PM IST (Updated: 27 Sept 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் பாலாற்றில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கிய அண்ணன்-தம்பி 2 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டனர்.

காட்பாடி

வேலூர் பாலாற்றில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கிய அண்ணன்-தம்பி 2 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டனர்.

தண்ணீரில் மூழ்கினர்

வேலூர் மாவட்டம், காட்பாடி விருதம்பட்டு காளியம்மன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருடைய மகன்கள் முபாரக் (வயது18). ஜாகிர் (17). இருவரும் காட்பாடியில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் 2 பேரும் தண்டல கிருஷ்ணாபுரம் பகுதியில் பாலாற்றில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ஜாகிர் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி கூச்சலிட்டார்.

இதனைக்கண்ட அவரது அண்ணன் முபாரக் அவரை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்தார். இவருக்கும் நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். அருகில் இருந்தவர்கள் இதனை கண்டு வேலூர் வடக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு துறை மற்றும் காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காட்பாடி தீயணைப்பு நிலை அலுவலர் பால்பாண்டி தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரில் மூழ்கிய சகோதரர்களை  நேற்று முன்தினம் மாலை வரை தேடும் பணியில் ஈடுபட்டனர். வெளிச்சம் குறைந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. 

பிணமாக மீட்பு

நேற்று காலை அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்து தண்ணீரில் மூழ்கிய சகோதரர்களை தேடும்பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலையில் முபாரக், ஜாகீர் ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story