2 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பேட்டரி திருட்டு


2 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பேட்டரி திருட்டு
x
தினத்தந்தி 27 Sep 2021 7:18 PM GMT (Updated: 27 Sep 2021 7:18 PM GMT)

குளித்தலையில் 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பேட்டரியை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குளித்தலை,
டயர் விற்பனை கடை
குளித்தலை- மணப்பாறை சாலையில் ரெயில்வே கேட் அருகே டயர் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர்களில் ஒருவரான நவ்பல் உசேன் கடந்த 25-ந் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் கடையின் ஷட்டர் கதவு திறந்த நிலையில் இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரும் அக்கடையின் மற்றொரு உரிமையாளருமான ஷேக்அப்துல்லா ஆகியோர் கடைக்கு சென்று பார்த்தனர். அப்போது கடையின் ஷட்டர் கதவில் பூட்டப்பட்டிருந்த 4 பூட்டுகளும் உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. 
பணம் திருட்டு
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கடையின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கடையின் உள்ளே இருந்த ஒரு மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ.12 ஆயிரத்து 500-ஐ மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. 
கடையில் இருந்த வேறு எந்த பொருட்களும் திருடப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து நவ்பல் உசேன் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
வலைவீச்சு
இதேபோல் குளித்தலையில் இருந்து கோட்டைமேடு செல்லும் வழியில் ஒரு பேட்டரி சர்வீஸ் மற்றும் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளரான சீகம்பட்டி பகுதியை சேர்ந்த சிவக்குமார் கடந்த 25-ந் தேதி இரவு தனது கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் அந்த கடை வழியாக சென்றவர்கள் கடையின் ஷட்டர் கதவு பாதி திறந்த நிலையில் இருப்பதை பார்த்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த சிவக்குமார் தனது கடைக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது கடையின் மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ.14 ஆயிரம் மற்றும் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள ஒரு புதிய பேட்டரி, ஒரு யு.பி.எஸ். மற்றும் ஒரு பழைய பேட்டரி ஆகியவை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது.
இந்த 2 சம்பவங்கள் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story