விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சாலை மறியல்; 466 பேர் கைது
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கரூர் மாவட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 466 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்,
வேளாண் சட்டங்கள்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறும் என ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு எல்.பி.எப். மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமை தாங்கினார். இதில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தொழிற்சங்கத்தினரை கைது செய்து, போலீஸ் பஸ்சில் ஏற்றி அழைத்து சென்றனர்.
இதில் எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஏ.ஐ.சி.சி.டி.யூ., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.யூ.டி.யூ.சி., எம்.எல்.எப்., எல்.எல்.எப்., கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 29 பெண்கள் உள்பட 180 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரெயில் முற்றுகை நடத்த முயற்சி
மத்திய அரசை கண்டித்து சுய ஆட்சி இந்தியா அகில இந்திய தலைவர் கிறிஸ்டினா சாமி தலைமையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர், காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சித்தலவாய் ெரயில் நிலையத்தில் நேற்று மதியம் திருச்சி-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ெரயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர்.
இதையடுத்து, கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதாஞ்சலி தலைமையிலான போலீசார் அவர்களை ெரயில் நிலையத்திற்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற 20 பெண்கள் உள்பட 105 பேரை மாயனூர் போலீசார் கைது செய்தனர்.
நொய்யல், தரகம்பட்டி
நொய்யல் குறுக்குச்சாலையில் கரூர் -ஈரோடு நெடுஞ்சாலையில் கரூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் சண்முகம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 26 பேரை கைது செய்தனர். மாலை 6 மணியளவில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும், அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக 26 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடவூர் ஒன்றியம் தரகம்பட்டியில் விவசாய சங்கத்தினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிந்தாமணிபட்டி போலீசார் மறியலில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்தனர்.
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சியில் உள்ள பள்ளப்பட்டியில் அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கந்தசாமி, சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் ராஜா முகமது, அனைத்து மோட்டார் வாகன ஓட்டுனர்கள் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 25 ஆண்கள், 15 பெண்கள் என மொத்தம் 40 பேரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.
தோகைமலை
தோகைமலை பஸ் நிலையத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கோஷம் எழுப்பினர். அதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 49 பேரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் குளித்தலை காந்தி சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்துச்செல்வன் தலைமை தாங்கினார். இதனை தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் ஊர்வலமாக குளித்தலை தலைமை தபால் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே ஊர்வலமாக வந்த போராட்ட குழுவினரை போலீசார் தடுத்தனர். இதையடுத்து அங்கேயே சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டபடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனைதொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட மொத்தம் 48 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி மறியலில் ஈடுபட்ட 466 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story