கலெக்டர் அலுவலகத்தில் மகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி


கலெக்டர் அலுவலகத்தில் மகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 28 Sept 2021 1:45 AM IST (Updated: 28 Sept 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மகளுடன் தாய் தீக்குளிக்க முயன்றார்.

தென்காசி:
தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மகளுடன் தாய் தீக்குளிக்க முயன்றார். மற்றொரு பெண்ணும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பதிலாக, அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டு சென்றனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் மனு அளித்து சென்றனர்.
இந்த நிலையில் தென்காசி அருகே ஆய்க்குடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரெஜிலா ராணி (வயது 41), தன்னுடைய மகள் பிரதிக்‌ஷாவுடன் (11) கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்க வந்தார். அப்போது ரெஜிலா ராணி திடீரென்று தனது உடலிலும், மகளின் உடலிலும் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

வீட்டுமனை நிலம் ஆக்கிரமிப்பு

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று, ரெஜிலா ராணியிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பின்னர் அவர்களை கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்க செய்து விட்டு, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
ரெஜிலா ராணி வழங்கிய மனுவில், ‘என்னுடைய கணவர் எட்வின் சேவியர் விபத்தில் இறந்து விட்டார். எனக்கு அரசு வழங்கிய இலவச வீட்டுமனை நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து வீடுகட்டி வருகிறார். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது வீட்டுமனை நிலத்தை மீட்டுத்தர வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தார்.

வரதட்சணை கொடுமை

பின்னர் சிறிதுநேரத்தில் சுரண்டை அருகே வீராணத்தைச் சேர்ந்த சண்முகத்தாய், தென்காசி கலெக்டர் அலுவலகத்துக்கு மனு வழங்க வந்தார். அவர் தன்னிடம் கணவர், மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.
பின்னர் சண்முகத்தாயை கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கச் செய்து விட்டு, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story