சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன


சேலம் சூரமங்கலம்  சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன
x
தினத்தந்தி 28 Sept 2021 2:17 AM IST (Updated: 28 Sept 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள், ரூ.62 ஆயிரம் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சூரமங்கலம்,
சார்பதிவாளர் அலுவலகம் 
சேலம் சூரமங்கலத்தில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. அங்கு சார்பதிவாளராக இந்துமதி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கிரு‌‌ஷ்ணராஜ் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 5.45 மணி அளவில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர். 
அப்போது அங்கு பணியாற்றி வரும் சார்பதிவாளர் இந்துமதி மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்கு தயார் நிலையில் இருந்தனர்.
சோதனை
இந்த நிலையில் திடீரென்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் அதிரடியாக புகுந்தனர். பின்னர் அலுவலகத்தின் கதவை உள்புறமாக பூட்டினர். தொடர்ந்து சார்பதிவாளர் இந்துமதியிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். 
பின்னர் அங்கிருந்த பீரோ, மேஜை ஆகியவற்றில் இருந்த ஆவணங்களை சோதனை நடத்தினர். தொடர்ந்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.
அதன்பிறகு அலுவலகம் முழுவதும் போலீசார் சோதனை செய்தனர். இரவு 9 மணி அளவில் ஊழியர்கள் சிலரை மட்டும் வீட்டிற்கு செல்ல அனுமதித்தனர்.  நள்ளிரவு வரை தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்றது. 
பரபரப்பு 
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கேட்ட போது, ‘சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்யும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் பெறப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில் மாலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. சார்பதிவாளர் உள்பட அலுவலர்கள், ஊழியர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத பணம் ரூ.62 ஆயிரம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டு உள்ளன.  இது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்படும்’ என்று கூறினர். 
லஞ்ச ஓழிப்பு போலீசாரின் இந்த அதிரடி சோதனையால் நேற்று சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மாலை முதல் இரவு வரை பரபரப்பு ஏற்பட்டது.

Next Story