அ.தி.மு.க. கவுன்சிலரை காரால் மோதி கொல்ல முயற்சி; வாலிபர் கைது
அ.தி.மு.க. கவுன்சிலரை காரால் மோதி கொல்ல முயன்றதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பரணம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பரணம் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவருக்கும், இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தி.மு.க. பிரமுகருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மணிகண்டன், உறவினர்களுடன் நேற்று முன்தினம் மாலை அவரது உறவினர்கள் துக்க நிகழ்ச்சிக்கு வந்து உள்ளார். மணிகண்டனின் கார் டிரைவர் குலோத்துங்கன் அங்கே இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து இருந்தார். அப்போது கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவரின் உறவினரான மகாராஜன் மகன் பிரவீன்குமார்(வயது 20) மோட்டார் சைக்கிளில் வந்து டிரைவர் அருகே விழுந்துள்ளார். இதனைக் கண்ட டிரைவர், பிரவீன் குமாரை தூக்க முயன்றார். அப்போது அவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மணிகண்டன், அங்கே வந்து அது பற்றி கேட்டதால் ஆத்திரம் அடைந்த பிரவீன்குமார் தனது வீட்டிற்கு சென்று தனது காரை எடுத்து வந்து மணிகண்டன் மற்றும் துக்க நிகழ்வுக்கு வந்தவர்கள் மீது மோதி உள்ளார். இதில் மணிகண்டனின் மனைவி படுகாயமடைந்தார். மணிகண்டன் மயிரிழையில் உயிர் தப்பினார். காரில் ேமாத வந்ததால், கூட்டத்தினர் அலறியடித்து ஓடினர். அப்போது அவ்வழியே வந்த பெண் மீது ஒரு மோட்டார் சைக்கிள் மோதி அவரும் காயமடைந்தார்.இதனை கண்ட பொதுமக்கள் பிரவீன்குமாரை காருடன் மடக்கி பிடிக்க முயன்றபோது, கூட்டத்திற்கு இடையே காரை தாறுமாறாக ஓட்டினார். இருப்பினும் அவரை மடக்கி பிடித்து இரும்புலிக்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், பிரவீன்குமார் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, அவரை அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே மணிகண்டனின் மனைவி மீனா தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பிரவீன்குமாரின் தந்தை மகாராஜன் கொடுத்த புகாரின்பேரில் மணிகண்டன் உள்ளிட்ட 8 பேர் மீது இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story