பக்தர்களுக்கு தேங்காய் தண்ணீர் பிரசாதம் வழங்கும் எந்திரம்


பக்தர்களுக்கு தேங்காய் தண்ணீர் பிரசாதம் வழங்கும் எந்திரம்
x
தினத்தந்தி 28 Sept 2021 2:44 AM IST (Updated: 28 Sept 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிலேயே முதல்முறையாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு தேங்காய் தண்ணீரை பிரசாதமாக வழங்கும் எந்திரத்தை மத்திய மந்திரி பிரகலாத்சிங் பட்டேல் இயக்கி வைத்தார்.

தஞ்சாவூர்;
இந்தியாவிலேயே முதல்முறையாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு தேங்காய் தண்ணீரை பிரசாதமாக வழங்கும் எந்திரத்தை மத்திய மந்திரி பிரகலாத்சிங் பட்டேல் இயக்கி வைத்தார்.
தேங்காய் தண்ணீர் பிரசாத எந்திரம்
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வரும். இந்த கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேங்காய் உடைத்து வழிபட்டு வருகின்றனர்.
தேங்காயில் இருந்து வெளியேறும் தண்ணீர் அந்த பகுதியில் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனை தவிர்க்கும் வகையிலும், தேங்காய் தண்ணீரை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் வகையிலும் நவீன எந்திரத்தை தஞ்சையில் உள்ள மத்திய அரசின் இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகத்தினர் வடிவமைத்தனர்.
மத்திய மந்திரி இயக்கி வைத்தார்
ரூ.7 லட்சம் மதிப்பில் தாங்கள் வடிவமைத்த எந்திரத்தை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் நிறுவினர். இந்த கருவியை மத்திய மந்திரி பிரகலாத் சிங் பட்டேல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நேற்று இயக்கி வைத்தார். 
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன், தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் மாதவன், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பண்ணைவயல் இளங்கோ, பொதுச்செயலாளர் ஜெய்சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரூ.7 லட்சத்தில் கருவி
பின்னர் இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழக இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேங்காய் தண்ணீரில் ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த தேங்காய் தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதன்படி கோவில்களில் பொதுமக்கள் தேங்காய் உடைத்து வழிபடும்போது, அந்த தேங்காயி்ல் இருந்து வெளியேறும் நீர் அப்பகுதியில் வீணாகுவதோடு, கழிவுநீர் போல் தேங்கிதுர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனை தடுக்க வேண்டும் எனக் கருதி இந்த நவீன கருவியை வடிவமைத்தோம்.
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் தேங்காய்கள் உடைக்கப்படுகிறது. அதிலிருந்து வெளியேறும் தண்ணீரை பக்தர்களுக்கு சுத்திகரித்து பிரசாதமாக வழங்க முடிவு செய்தோம். அதன்படி ரூ.7 லட்சம் செலவில் இந்த நவீன கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக இங்குதான் நிறுவப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்

Next Story