குமரியில் விடிய, விடிய கனமழை


குமரியில் விடிய, விடிய கனமழை
x
தினத்தந்தி 28 Sept 2021 3:24 AM IST (Updated: 28 Sept 2021 3:24 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. களியலில் 17 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த கனமழையால் திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. களியலில் 17 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
திற்பரப்பு அருவியில் வெள்ளம்
புயலால் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் இ்ருந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து விடிய, விடிய பெய்தது. இதனால் நாகர்கோவிலில் உள்ள சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. 
பழையாறு, குழித்துறை தாமிரபரணியாறு, கோதையாறு, பரளியாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகள், வாய்க்கால்களிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நாகர்கோவில் குமரி அணை, சபரி அணை, சோழன்திட்டை அணை போன்றவற்றில் மழை வெள்ளம் மறுகால் பாய்ந்தோடியது. நாகர்கோவில் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 24 அடியை எட்டியுள்ளது.
மழையினால் கோதையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அந்த தண்ணீர் செம்மண் கலந்த பழுப்பு நிறத்தில் இருந்தது. இதனால் அருவியின் முன்புறம் உள்ள கல்மண்டபத்தின் கீழ்பகுதியை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று முன்தினம் வரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படா விட்டாலும் அருவியின் மேல் பகுதியில் படகு சவாரி செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நேற்று அதிக தண்ணீர் வரத்து இருந்ததின் காரணமாக படகுசவாரியும் நடைபெறவில்லை. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மின்சாரம் துண்டிப்பு
நாகர்கோவில் பறக்கிங்கால் பகுதியில் உள்ள தாழ்வான குடியிருப்புகள் அனைத்திலும் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தனர். நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நாகர்கோவில் தடிக்காரன்கோணம், அருமநல்லூர், பூதப்பாண்டி, திட்டுவிளை, குலசேகரம், அருமனை, கீரிப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நெல் வயல்கள், வாழைத்தோட்டங்கள், தென்னந்தோப்புகள், ரப்பர் தோட்டங்கள் போன்றவற்றில் மழைநீர் புகுந்து குளம்போல் காட்சி அளித்தது. 
சிறமடம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நேற்று பெய்த மழையின் காரணமாக தரையோடு சாய்ந்தது. தெரிசனங்கோப்பில் இருந்து அருமநல்லூருக்கு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழை வெள்ளம் சென்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று மதியம் தண்ணீர் வடியத் தொடங்கியது. இதனால் போக்குவரத்து சீரானது. ஆனாலும் சாலையின் இருபுறங்களிலும் உள்ள வயல்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்தது.
நேற்று முன்தினம் மழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் பல இடங்களில் தென்னை மரங்கள் சாய்ந்தன. சில இடங்களில் மின்கம்பங்களும் சரிந்து விழுந்தது. இதனால் தென்தாமரைக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் இருளில் தவித்தனர். இதேபோல் மேற்கு மாவட்டப் பகுதிகளிலும் சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன.
17 செ.மீ. பதிவு
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
பேச்சிப்பாறை அணை- 15.2, பெருஞ்சாணி அணை- 41.4, புத்தன் அணை- 40.8, சிற்றார்-1 அணை - 72.4, சிற்றார்- 2- அணை- 67, மாம்பழத்துறையாறு அணை- 117, முக்கடல் அணை- 65.7, பூதப்பாண்டி- 60.4, களியல்- 172 (17 செ.மீ.), கன்னிமார்- 75.4, கொட்டாரம்- 90.2, குழித்துறை- 151, மயிலாடி- 115, நாகர்கோவில்- 117.2, சுருளக்கோடு- 137,  தக்கலை- 132, குளச்சல்- 26.4, இரணியல்- 32, பாலமோர்- 133.8, ஆரல்வாய்மொழி- 25, கோழிப்போர்விளை- 130 (13 செ.மீ.), குருந்தங்கோடு- 110.4, முள்ளங்கினாவிளை- 122,  ஆனைக்கிடங்கு- 77 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது.
இதில் அதிகபட்சமாக களியல் பகுதியில் 17 செ.மீ. அளவுக்கும், குறைந்தபட்சமாக பேச்சிப்பாறை அணைப்பகுதியில் 15.2 மி.மீ. அளவுக்கும் மழை பெய்திருந்தது. மழையினால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. நேற்று காலை பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44.37 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2572 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 227 கனஅடி தண்ணீர் பாசன மதகுகள் வழியாகவும், 3294 கன அடி தண்ணீர் உபரிநீர் மதகுகள் வழியாக உபரிநீராகவும் திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 59.65 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1847 கன அடி தண்ணீர் வந்தது. சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 192 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 278 கன அடி தண்ணீரும் வந்தது. மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 18 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. முக்கடல் அணைக்கு வினாடிக்கு 5 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 7.42 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Next Story