பெண்ணிடம் நகை பறித்த கேரள ஆசாமி கைது
அருமனை அருகே பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்த கேரள ஆசாமியை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அருமனை:
அருமனை அருகே பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்த கேரள ஆசாமியை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை பறிப்பு
அருமனை அருகே உள்ள செம்மங்காலை பகுதியைச் சேர்ந்தவர் லலிதா(வயது50). இவர் நேற்று மதியம் புதன்சந்தை அருகில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க சென்றார். பின்னர், பொருட்களை வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரை ஒரு மர்ம ஆசாமி பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். அந்த ஆசாமி அருகில் வந்ததும், திடீரென லலிதா அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தார்.
பொதுமக்கள் மடக்கினர்
இதனால், அதிர்ச்சி அடைந்த லலிதா ‘திருடன்... திருடன்...’ என்று சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை கண்ட அந்த ஆசாமி மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றார். அதற்குள் அந்த ஆசாமியை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும், திருடனின் கையில் இருந்த லலிதாவின் 3 பவுன் நகையையும் பொதுமக்கள் மீட்டு அவரிடம் கொடுத்தனர்.
கேரளாவை சேர்ந்தவர்
பின்னர், அந்த வழியாக வந்த களியக்காவிளை போலீசாரிடம் அந்த ஆசாமியை ஒப்படைத்தனர். ஆனால், சம்பவ இடம் அருமனை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் அந்த ஆசாமியை அருமனை போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அருமனை போலீசார் நடத்திய விசாரணையில், நகையை பறித்த ஆசாமி கேரள மாநிலம் பொழியூர் பகுதிைய சேர்ந்த அனில்குமார்(41) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story